காதலர் தின கொண்டாட்டம்: மெரினா கடற்கரையில் காதலர்கள் உற்சாகம்


காதலர் தின கொண்டாட்டம்: மெரினா கடற்கரையில் காதலர்கள் உற்சாகம்
x

காதலர் தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் காதலர்கள் இடையே உற்சாகம் கரைபுரண்டது. காதலர்கள் பரிசு பொருட்கள் வழங்கி அன்பை பரிமாறி கொண்டனர்.

சென்னை

தமிழகத்தில் காதலர் தின கொண்டாட்டங்கள் நேற்று உற்சாகமாக அரங்கேறின. காதல் ஜோடிகளின் கூடாரமாய் திகழும் சென்னை மெரினா கடற்கரையில் நேற்று காதல் ஜோடிகளின் நடமாட்டம் மிகுதியாகவே இருந்தன.

பொங்கி வரும் கடல் அலைகளின் சத்தத்தின் பின்னணியில், சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கடற்கரை மணற்பரப்பில் காதலர்கள் சுற்றித்திரிந்தனர். 'காதல் வெயில் சூட்டையுமா அறியாது?' என்று பலர் கிசுகிசுத்தபடியே நடந்து சென்றதை பார்க்க முடிந்தது.

சிலர் தங்களது ஜோடியை கடற்கரைக்கு கூட்டிவந்து, எதிர்பாராத சூழலில் காதலை வெளிப்படுத்தினர். வீட்டில் சிலிண்டர் கூட தூக்க திணறும் இளைஞர்கள் தங்களது காதலிகளை 'அலேக்'காக தூக்கி ஒய்யாரமாக (வலிகளை மறைத்துக்கொண்டு) நடந்து சென்றனர். சுடும் வெயிலிலும் காதல் சேட்டைகளால் மெரினா கடற்கரை குளிர்ச்சியாகவே காணப்பட்டது.

கடற்கரை மணற்பரப்பில் அமர்ந்தும், கடல் அலையில் கால் நனைத்தும், 'செல்பி' எடுத்தும், கைகோர்த்து நடந்தும், ஒரு 'கோன் ஐஸ்கிரீமை' பாதி பாதி சாப்பிட்டும், மணற்பரப்பில் விளையாடியும் காதலர் தினத்தில் காதலர்கள் தங்கள் அன்பை பொழிந்தனர்.

இதேபோல சென்னையில் உள்ள மற்ற கடற்கரைகளிலும் காதலர்கள் அதிக அளவில் ஜோடியாக சுற்றித்திரிந்ததை பார்க்க முடிந்தது.

அதேபோல ஷாப்பிங் மால்கள், பூங்காக்கள், சினிமா தியேட்டர்களிலும் காதல் ஜோடிகளின் நடமாட்டம் அதிகமாக இருந்ததை காண முடிந்தது. இதுதவிர கோவில்களிலும் நேற்று காதல் ஜோடிகள் தங்கள் காதல் கைகூட மனமுருக வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

காதலர்கள் தாண்டி காதலர் தினத்தை புதுமண தம்பதிகளும் உற்சாகமாக கொண்டாடினார்கள். கணவன் விரும்பும் பரிசு பொருட்களை மனைவியும், மனைவி ரசிக்கும் பரிசை கணவரும் ஆர்வமுடன் வாங்கி தந்தனர். அந்த வகையில் இதய வடிவ தலையணை உள்ளிட்ட பரிசு பொருட்கள் வீடுகளில் யாருக்கும் தெரியாமல் பரிமாறப்பட்டன.

பலரது வீடுகளில் காதலர் தின 'கேக்'குகள் வாங்கி காதலர் தினத்தை மகிழ்ச்சி பொங்க கொண்டாடினர். எதிர்பாராத பரிசுகள் தந்து தங்கள் துணையை ஆச்சரியப்படுத்தினர். இப்படி காதலர் தினம் நேற்று அனைத்து தரப்பினராலும் உற்சாகமாகவே கொண்டாடப்பட்டது.

எனவே காதல் என்ற புனிதத்தை ஆயுள் வரை காப்பாற்றுவதே அந்த காதலுக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடன் ஆகும். கண்ணில் தோன்றி நெஞ்சில் குடிபுகும் காதலை வாழ்நாள் முழுவதும் போற்று வோம்.


Next Story