லாரி மீது வேன் மோதல்; பள்ளி மாணவர்கள் உள்பட 10 பேர் காயம்


லாரி மீது வேன் மோதல்; பள்ளி மாணவர்கள் உள்பட 10 பேர் காயம்
x

பெரம்பலூர் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது வேன் மோதிய விபத்தில் பள்ளி மாணவர்கள் உள்பட 10 பேர் காயமடைந்தனர்.

பெரம்பலூர்

லாரி மீது வேன் மோதல்

விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே ஆரோவில் உள்ள தனியார் நடுநிலைப்பள்ளியை சேர்ந்த 11 மாணவா்கள், 2 மாணவிகள் என மொத்தம் 13 பேர் நெல்லை மாவட்டத்தில் நடைபெற்ற குராஷ் தற்காப்பு கலை போட்டியில் விளையாட தங்களது ஆசிரியர்கள், பயிற்சியாளர்களுடன் ஒரு வேனில் நேற்று முன்தினம் இரவு புறப்பட்டனர்.

இந்த வேன் நேற்று நள்ளிரவு 1 மணியளவில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, காரை பிரிவு சாலையை தாண்டி சென்று கொண்டிருந்தது. அப்போது டீசல் இல்லாமல் ஜல்லிக்கற்களுடன் சாலையில் நின்று கொண்டிருந்த டிப்பர் லாரி மீது வேன் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் வேனின் வலது முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது.

கண்ணாடிகளை உடைத்து மீட்பு

இந்த விபத்தில் வேனின் டிரைவர், மாற்று டிரைவர், தூங்கியவாறு பயணம் செய்த பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள் இடிபாடுகளுக்கிடையே சிக்கி கொண்டதில் சிலர் காயமடைந்தனர். அப்போது சென்னையில் இருந்து திருச்சி நோக்கி வந்த கார் ஒன்றும் விபத்துக்குள்ளாகி நின்ற வேனின் மீது மோதியது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனைக்கண்ட அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் இந்த விபத்து குறித்து பாடாலூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.அதன்பேரில் பாடாலூர் போலீசார், நெடுஞ்சாலை ரோந்து போலீசார், போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் போலீசார், தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் வேனின் கண்ணாடிகளை உடைத்து உள்ளே இடிபாடுகளுக்கிடையே சிக்கி கொண்டிருந்த மாணவர்கள், ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள், டிரைவர்கள் ஆகியோரை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

10 பேர் காயம்

இதில் மாணவர்கள் அகத்தியன் (வயது 13), கேசவ் சரண் (14) இன்பராஜன் (14), ரமணன் (14), நிர்மல் (14), டிரைவர் குமார் (40), பயிற்சியாளர்கள் ராமமூர்த்தி (51), சரவணன் (51) மற்றும் அவர்களுடன் வந்திருந்த ஹரி கிருஷ்ணன் (47), பூபதி (20) ஆகிய 10 பேர் காயமடைந்தனர். காரில் பயணம் செய்த யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை. ஆனால் காரின் இடது பக்கம் சேதமடைந்தது. பின்னர் காயமடைந்தவர்களை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து போலீசார் விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர். மருத்துவமனையில் அகத்தியன், ஹரிகிருஷ்ணன், ராமமூர்த்தி ஆகிய 3 பேரும் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதமுள்ள 7 பேர் புறநோயாளியாக சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இந்த விபத்து தொடர்பாக பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகாலையில் நடந்த இந்த விபத்து அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story