ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் மக்கள் பயன்பாட்டுக்காக பல்வேறு மருத்துவ கட்டமைப்புகள்


ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் மக்கள் பயன்பாட்டுக்காக பல்வேறு மருத்துவ கட்டமைப்புகள்
x

ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் மக்கள் பயன்பாட்டுக்காக பல்வேறு மருத்துவ கட்டமைப்புகளை அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

சென்னை

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் சென்னை ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் பல்வேறு மருத்துவ கட்டமைப்புகளை மக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வந்தனர்.

பின்னர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-

ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரி 1912-ம் ஆண்டு 120 படுக்கைகளுடன் தொடங்கப்பட்டு தற்போது 834 படுக்கைகள் கொண்ட ஆஸ்பத்திரியாக செயல்பட்டு வருகிறது. 110 ஆண்டுகளாக மருத்துவ சேவை புரிந்து வரும் இந்த ஆஸ்பத்திரியில் பொது மருத்துவம், எலும்பு முறிவு சிகிச்சை பிரிவு, புற்றுநோய் பிரிவு, குடல்நோய் பிரிவு, பல் மருத்துவம், தோல் மருத்துவம், சிறுநீரகவியல் துறை, மாரடைப்பு நோய் பிரிவு, நீரிழிவு நோய் மருத்துவம், குழந்தைகள் பிரிவு, தலைக்காயம் (அறுவை/மருத்துவம்), காது, மூக்கு, தொண்டை சிகிச்சைப் பிரிவு, வலிநிவாரண பிரிவு ஆகிய சிகிச்சைப் பிரிவுகள் உள்ளன.

இங்கு தினமும் சுமார் 2 ஆயிரத்து 900 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ரூ.2.76 கோடியில் டெலிகோபால்ட் கதிரியக்கம் கருவி இங்கு நிறுவப்பட்டுள்ளது. புற்றுநோய் கட்டிகளுக்கு மிகத்துல்லியமாக கதிர்வீச்சு சிகிச்சை அளிக்கவும், வலியால் அவதியுறும் புற்றுநோயாளிகளுக்கு வலி நிவாரணியாகவும், ரத்த கசிவுகளை தடுக்கவும் இக்கருவி பயன்படும். தினந்தோறும் 30-க்கும் மேற்பட்ட புற்றுநோயாளிகள் இதன் மூலம் பயன் பெறுவார்கள்.

ரூ.2.20 கோடியில் அவசர சிகிச்சை பிரிவு கட்டிடம், நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறனின் தொகுதி நிதி ஒதுக்கீடு மூலம் ரூ.50 லட்சத்தில் பல் மருத்துவ கருவிகள், ரூ.1.10 கோடியில் பிரத்யேகமாக சலவைக்கென்று புதிதாக ஒரு கட்டிடம், அக்கட்டிடத்தில் ரூ.1.25 கோடியில் நவீன சலவை செய்யும் எந்திரம் ஆகியவை இன்று முதல் மக்களின் பயன்பாட்டுக்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதில் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, மத்திய சென்னை எம்.பி. தயாநிதிமாறன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் ப.செந்தில்குமார், மருத்துவக்கல்வி இயக்குனர் டாக்டர் சாந்திமலர், ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர் மணி, நிலைய மருத்துவ அதிகாரி டாக்டர் ஆனந்த பிரதாப் மற்றும் உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.


Next Story