கோவை-ஈரோடு பிரிவு சாலையில் தாறுமாறாக செல்லும் வாகனங்கள்


கோவை-ஈரோடு பிரிவு சாலையில் தாறுமாறாக செல்லும் வாகனங்கள்
x

கரூா் கோவை-ஈரோடு பிரிவு சாலையில் வாகனங்கள் தாறுமாறாக செல்கின்றன. எனவே நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரூர்

கோவை-ஈரோடு பிரிவு சாலை

கரூரில் இருந்து கோவை, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் கரூரில் இருந்து கோவை, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள், லாரிகள், இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் திருக்காம்புலியூர் ரவுண்டானா வழியாக சென்று முனியப்பன் கோவில் அருகே பிரிந்து கோவை மற்றும் ஈரோடு பகுதிகளுக்கு செல்கின்றன.

ஒரே சாலையில் இணைகிறது

இதேபோல், ஈரோடு, கோவை போன்ற பகுதிகளில் இருந்து கரூர் நோக்கி வரும் பஸ்கள், லாரி, இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் முனியப்பன் கோவில் அருகே வந்து ஒரே சாலையில் இணைந்து கரூர் நோக்கி வருகின்றன.

இந்த பிரிவு சாலை முக்கிய இடமாக உள்ளது. இந்நிலையில், கோவை, ஈரோடு பகுதிகளுக்கு செல்லும் வாகனங்களும், கோவை, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கரூர் வரும் வாகனங்களும் முனியப்பன் கோவில் பகுதியில் ஒரே இடத்தில் சந்தித்து பிரிந்து செல்லும் போது, அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் வாகன விபத்துக்களும் ஏற்பட்டு வருகின்றன.

வாகன ஓட்டிகள் கோரிக்கை

கோவை-ஈரோடு பிரிவு சாலையில் பல மாதங்களுக்கு முன்பு போக்குவரத்து சிக்னல் அமைக்கப்பட்டு, செயல்பட்டு வந்தது. தற்போது அந்த பகுதியில் அமைக்கப்பட்ட சிக்னல் செயல்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகின்றன. இப்பகுதியில் போக்குவரத்து சிக்னல் செயல்படாததால் வாகனங்கள் அனைத்தும் தாறுமாறாக செல்லும் நிலை உள்ளது. இதனால் வாகனங்களில் செல்பவர்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.

எந்நேரமும் போக்குவரத்து நடைபெற்று வரும் கோவை, ஈரோடு பிரிவு சாலை பகுதியில் சிக்னல் அமைத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story