புதுக்கோட்டை அருகே துணிகரம்: அரசு பள்ளி ஆசிரியை வீட்டில் 50 பவுன் நகைகள், ரூ.5 லட்சம் கொள்ளை


புதுக்கோட்டை அருகே துணிகரம்: அரசு பள்ளி ஆசிரியை வீட்டில் 50 பவுன் நகைகள், ரூ.5 லட்சம் கொள்ளை
x

புதுக்கோட்டை அருகே அரசு பள்ளி ஆசிரியை வீட்டின் கதவை உடைத்த மர்ம ஆசாமிகள் 50 பவுன் நகைகள், ரூ.5 லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

புதுக்கோட்டை

அரசு பள்ளி ஆசிரியை

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருள் நகரில் வசித்து வருபவர் பன்னீர்செல்வம் (வயது 39). இவர் தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி டயானா (34). இவர் சீமானூர் அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். கடந்த 15-ந் தேதி பன்னீர் செல்வம் தனது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டிவிட்டு கீரனூர் அருகே உள்ள திருமலைராயபுரம் டி.மேலப்பட்டிக்கு சென்றார்.

இந்தநிலையில் இவர்களது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதாக நேற்று பக்கத்து வீட்டுக்காரர்கள் பன்னீர் செல்வத்துக்கு தகவல் கொடுத்தனர். இதன்பேரில் பன்னீர் செல்வம் தனது வீட்டுக்கு வந்து உள்ளே சென்று பார்த்தார்.

50 பவுன் நகைகள், ரூ.5 லட்சம் கொள்ளை

அப்போது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு துணிகள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. மேலும் நகை பெட்டியில் வைத்திருந்த 50 பவுன் தங்க நகைகள், ரூ.5 லட்சம் ஆகியவற்றை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கீரனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாமுவேல் ஞானம், சப்-இன்ஸ்பெக்டர் செல்லத்துரை ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை கொள்ளையடித்து விட்டு தப்பி ஓடிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.

1 More update

Next Story