காலி குடங்களுடன் குடிநீரை தேடி அலையும் கிராம மக்கள்


காலி குடங்களுடன் குடிநீரை தேடி அலையும் கிராம மக்கள்
x
தினத்தந்தி 24 April 2023 6:45 PM GMT (Updated: 24 April 2023 6:45 PM GMT)

சிதம்பரம் அருகே காலி குடங்களுடன் குடிநீரை தேடி அலையும் கிராம மக்கள் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என எதிர்பார்ப்பு

கடலூர்

சிதம்பரம்

சிதம்பரம் அருகே மேல திருக்கழிப்பாலை ஊராட்சி உள்ளது. இங்கு சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் கடந்த வெள்ள காலத்தின் போது கூட்டுக்குடிநீர் திட்ட குழாய்கள் சேதம் அடைந்ததால் குடிநீர் வினியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. உடைந்த குழாயை சீரமைக்காததால் கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.

மாற்று ஏற்பாடு

இதையடுத்து மாற்று ஏற்பாடாக அருகில் உள்ள வசபுத்தூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் கீழ் கவரப்பட்டு, மேல திருக்கழிப்பாலை, கீழ திருக்கழிப்பாலை, கீழப்பேராம்பை, பிச்சாவரம் ஆகிய ஊராட்சிகளில் உள்ள 10-க்கும் மேற்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் குடிநீர் தேக்கப்பட்டு மேலதிருக்கழிப்பாலை கிராம மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக நீரேற்றும் அறைக்கு குறைந்த அளவு நேரமே மின்சாரம் வினியோகம் செய்யப்படுவதால் மேல திருக்கழிப்பாலை ஊராட்சிக்கு குடிநீர் வினியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் இக்கிராமத்தில் மீண்டும் குடிநீர் தட்டு்ப்பாடு நிலவியது. குடிப்பதற்கும், குளிப்பதற்கும் தண்ணீர் கிடைக்காமல் கிராம மக்கள் கடும் அவதி அடைந்தனர்.

குடிநீரை தேடி

சிறுவர்கள், பெரியவர்கள் என அனைவரும் காலி குடங்களை கைகளில் தூக்கிக்கொண்டு குடிநீரை தேடி அலைந்தனர். அப்போது கொட்டாமேடு என்ற பகுதியில் குடிநீர் குழாயில் இருந்து தண்ணீர் வழிந்தோடியதை பார்த்தனர். உடனே கிராம மக்கள் வரிசையில் கால்கடுக்க காத்து நின்று அந்த தண்ணீரை பிடித்தனர். பின்னர் அதனை தலை மற்றும் இடுப்பில் வைத்து சுமந்தபடி பொடி நடையாக நடந்து கிராமத்தை வந்தடைந்தனர். சிலர் சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனங்களில் சென்று தண்ணீரை பிடித்து வந்தனர். அப்படி வரும் வழியில் டயர் பஞ்சர் ஆகி விடுவதால் அதை சரிசெய்து விட்டு மீண்டு வருவதற்குள் ஒழி வழி ஆகி விடுகிறது.

சுட்டெரிக்கும் வெயிலில்

ஆனால் வாகன வசதி இல்லாதவர்கள் சுட்டெரிக்கும் வெயிலில் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று தண்ணீர் பிடித்து வர வேண்டிய நிலை உள்ளதால் கடும் அவதி அடைந்து வருவதாகவும், எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் வசதி செய்து தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மின்சார வசதி வேண்டும்

இது குறித்து மேலதிருக்கழிப்பாலை கிராமத்தை சேர்ந்த ஜோதி கூறியதாவது:-

கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாய் சேதம் அடைந்து வெகு நாட்கள் ஆகிவிட்டது. அதை சீரமைத்து இருந்தால் நாங்கள் குடிநீரை தேடி ஊா் ஊராக அலையவேண்டியதில்லை. பொதுமக்களுக்கு மிகவும் அத்தியாவசிய தேவைகளில் ஒன்று குடிநீர். இதற்காக நாங்கள் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று குழாயில் இருந்து கசியும் தண்ணீரை பிடித்து வர வேண்டிய அவல நிலை உள்ளது. எனவே சேதம் அடைந்த குடிநீர் குழாயை சரிசெய்யும் வரை அருகில் உள்ள ஊராட்சிகளில் உள்ள நீர்த்தேக்க தொட்டிகளில் இருந்து எங்கள் கிராமத்துக்கு குடிநீர் வினியோகம் செய்வதற்கு போதிய மின்சார வசதியை செய்து தர வேண்டும். குடிநீர் இல்லாமல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அல்லல்படுகிறோம். எனவே எங்களின் மன வேதனையை உணா்ந்து குடிநீர் வசதி செய்து தர மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வயதானவர்கள் பரிதாபம்

இதே கிராமத்தை சேர்ந்த ராணி:-

குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமல் மிகவும் சிரமப்படும் நாங்கள் நீண்ட தூரம் நடந்து சென்று தண்ணீரை பிடித்து வரவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். அதுவும் போனோமா, தண்ணீரை பிடித்தோமா என்று இல்லை. குழாயில் இருந்து கசியும் தண்ணீரையும் வரிசையில் நின்றுதான் பிடிக்க வேண்டிய நிலை உள்ளது. இளைஞர்கள், இளம்பெண்கள் தலைச்சுமையாக சுமந்து தண்ணீரை எடுத்து வருகிறோம். ஆனால் வயதான ஆண் மற்றும் பெண்களின் நிலையோ மிகவும் பரிதாபமாக உள்ளது. கொளுத்தும் வெயிலில் குடங்களில் தண்ணீரை பிடித்து வரும் வழியில் தரையில் வைப்பது, பின்னர் சுமப்பது, பின்னர் தரையில் வைப்பது என மெதுவாக நடந்து வீடு வந்து சேர்வதற்குள் ஒரு வழியாகி விடுகிறது. எனவே எங்கள் கிராமத்தில் குடிநீர் வினியோகம் செய்வதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story