விநாயகர் சதுர்த்தி பண்டிகை: இந்து அமைப்பினருடன் போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை - சிலைகள் வைக்க 11 நிபந்தனைகள்


விநாயகர் சதுர்த்தி பண்டிகை: இந்து அமைப்பினருடன் போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை - சிலைகள் வைக்க 11 நிபந்தனைகள்
x

விநாயகர் சதுர்த்தியையொட்டி சிலைகள் வைப்பது தொடர்பாக இந்து அமைப்பினருடன் போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். அப்போது சிலைகள் வைப்பது தொடர்பாக 11 நிபந்தனைகள் விதித்தனர்.

சென்னை

விநாயகர் சதுர்த்தியையொட்டி சென்னையில் விநாயகர் சிலைகள் நிறுவுவது, வழிபாடு செய்வது குறித்தும் மற்றும் விநாயகர் சிலைகளை அமைதியான முறையில் கடலில் கரைப்பது குறித்தும் பல்வேறு அமைப்பினருடன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் இணை கமிஷனர்கள் சிபி சக்ரவர்த்தி, சாமூண்டிஸ்வரி மற்றும் இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, சிவசேனா, இந்து அனுமன் சேனா, பாரதீய ஜனதா கட்சி, பாரத் இந்து முன்னணி, விஷ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட 29 அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். சென்னை ஐகோர்ட்டு மற்றும் தமிழக அரசின் உத்தரவுப்படி விதிகளை பின்பற்றி, போலீசார் அனுமதிக்கும் நாட்களில், விநாயகர் சிலைகளை அமைதியான முறையில் ஊர்வலமாக எடுத்துச் சென்று, நீரில் கரைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

நிபந்தனைகள்

மேலும், விநாயகர் சிலைகளை நிறுவி வழிபாடு செய்வதற்கான நிபந்தனைகள் குறித்தும் தெரிவிக்கப்பட்டது. அந்த நிபந்தனைகள் வருமாறு:-

* விநாயகர் சிலைகள் நிறுவுமிடத்தின் நில உரிமையாளர்கள், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள், நெடுஞ்சாலைத்துறை அல்லது அரசு துறையிடம் இருந்து அனுமதி பெற்றிருக்க வேண்டும்.

* தீயணைப்புத்துறை, மின்வாரியத்திடம் இருந்து தடையில்லா சான்று பெற்றிருக்க வேண்டும்.

* சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரியிடம் விநாயகர் சிலைகளை நிறுவுவதற்கான படிவங்களை பூர்த்தி செய்து, அதில் குறிப்பிட்டுள்ள கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகளை கடைபிடிக்க உறுதியளித்து அனுமதி பெற்றிருக்க வேண்டும்.

* நிறுவப்படும் சிலையின் உயரம் அடித்தளத்தில் இருந்து மேடை வரை 10 அடிக்கு மேல் இருக்கக்கூடாது.

கோஷமிடக்கூடாது

* பிற வழிபாட்டுத்தலங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றின் அருகில் சிலைகள் நிறுவப்படுவதை தவிர்க்க வேண்டும்.

* மத வெறுப்புணர்ச்சியை தூண்டும் வகையிலோ, பிற மதத்தினர் உணர்வுகளை புண்படுத்தும் வகையிலோ முழக்கமிடுவதற்கும், கோஷமிடுவதற்கும் எவ்விதத்திலும் இடம் தரக்கூடாது.

* சிலைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இரு தன்னார்வலர்களை 24 மணி நேரமும் சுழற்சி முறையில் நியமிக்க வேண்டும்.

* நிகழ்ச்சி நடக்கும் வளாகத்தில் எந்தவித அரசியல் கட்சிகள் அல்லது மதரீதியான தலைவர்கள் ஆகியோருக்கு ஆதரவான பலகைகள், விளம்பரத்தட்டிகள் வைக்கக்கூடாது.


பட்டாசு வெடிக்க தடை

* தீ பாதுகாப்பு விதிமுறைகளும், விதிகளும் கட்டாயம் பின்பற்ற வேண்டும், மின்சார சாதனங்கள், பந்தல்கள் அவ்வப்போது கண்காணித்து, விபத்துக்கள் மற்றும் அசம்பாவிதங்கள் நிகழாமல் கவனித்து கொள்ள வேண்டும்.

* விநாயகர் சிலைகளை கரைக்க காவல்துறை அனுமதிக்கப்பட்ட நாட்களில், அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே நான்கு சக்கர வாகனங்களில் எடுத்துச்சென்று அமைதியான முறையில் கரைக்க வேண்டும்.

* விநாயகர் சிலை நிறுவப்பட்ட இடங்கள், ஊர்வல பாதைகள் மற்றும் கரைப்பிடங்களில் பட்டாசுகள் வெடிக்க அனுமதி இல்லை.

மேற்கண்ட நிபந்தனைகளை பின்பற்ற அதிகாரிகள் அறிவுறுத்தினர்.


Next Story