பூண்டி ஏரியில் இருந்து புழலுக்கு தண்ணீர் திறப்பு


பூண்டி ஏரியில் இருந்து புழலுக்கு தண்ணீர் திறப்பு
x

பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

திருவள்ளூர்

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி. இந்த ஏரியில் மழைநீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திரா மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும்போது புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு இணைப்பு கால்வாய் வழியாக திறந்து விடப்படுவது வழக்கம்.

கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி கடந்த மே மாதம் 5-ந்தேதி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. ஆரம்பத்தில் வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. அதன் பின்னர் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது. அதிகபட்சமாக வினாடிக்கு ஆயிரத்து 700 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. கிருஷ்ணா நீர் வருகை கருத்தில் கொண்டு பூண்டி ஏரியில் இருந்து புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு மே 10-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.

கிருஷ்ணா நீர் வருகையால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. கடந்த மாதம் 21-ந் தேதி பூண்டி ஏரி நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியது. அதேபோல் புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகள் முழுவதுமாக நிரம்பின. இதனை கருத்தில் கொண்டு பூண்டி ஏரியில் இருந்து புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு 22-ந் தேதி தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.

பூண்டி ஏரி முழுவதுமாக நிரம்பியதால் கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தும்படி தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆந்திர அரசுக்கு கடிதம் எழுதினர். இதனைத் தொடர்ந்து கடந்த 1-ந் தேதி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.

எனினும் ஆந்திராவில் பெய்த பலத்த மழை காரணமாக கிருஷ்ணா கால்வாயில் நேற்று காலை நிலவரப்படி வினாடிக்கு 140 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனை கருத்தில் கொண்டு பூண்டி ஏரியில் இருந்து இணைப்புக் கால்வாய் வழியாக புழல் ஏரிக்கு நேற்று மாலை முதல் தண்ணீர் திறக்கப்பட்டது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும்.

இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். நேற்று காலை 6 மணி நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 30.10 அடியாக பதிவாகியது. 1.763 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு வினாடிக்கு 140 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. பூண்டி ஏரியில் இருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு வினாடிக்கு 13 கனஅடி வீதம் தண்ணீர் அனுப்பப்படுகிறது.


Next Story