கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம்


கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம்
x

போதுமான தண்ணீர் இருப்பு உள்ளதால் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.

திருவள்ளூர்

சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் முக்கிய ஏரியாக பூண்டி ஏரி உள்ளது. இதில் மழைநீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும் போது புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்துவிடப்படுவது வழக்கம். இந்த திட்டத்தின்படி தமிழகத்திற்கு ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி., ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. தண்ணீரை பூண்டி ஏரிக்கு திறந்து விட வேண்டும். அதன்படி கடந்த நவம்பர் 28-ந் தேதி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த நிலையில் வடகிழக்கு பருவ மழை மற்றும் மாண்டாஸ் புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் பலத்த மழை கொட்டியது. இதனால் ஏரி முழு கொள்ளளவை எட்டியது.

போதுமான தண்ணீர் இருப்பு உள்ளதால் கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பை நிறுத்தும்படி தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆந்திர அரசுக்கு கடிதம் எழுதினர். இதனை ஏற்று கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். நேற்று காலை 6 மணி நிலவரப்படி நீர்மட்டம் 33.68 அடியாக பதிவாகியது. 2.724 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. பூண்டி ஏரியிலிருந்து புழல் ஏரிக்கு இணைப்பு கால்வாய் வழியாக வினாடிக்கு 240 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாய் வழியாக வினாடிக்கு 38 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நவம்பர் 28-ந் தேதியிலிருந்து நேற்று முன்தினம் இரவு வரை கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு 3.500 டி.எம்.சி. தண்ணீர் வந்து சேர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.


Next Story