மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தம்


மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு  நிறுத்தம்
x
தினத்தந்தி 10 Oct 2023 6:52 AM IST (Updated: 10 Oct 2023 7:23 AM IST)
t-max-icont-min-icon

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு இன்று காலை 6.00 மணி முதல் நிறுத்தப்பட்டது.

மேட்டூர்

பருவமழை காலங்களில் பெய்யும் மழைநீரை சேமித்து வைத்து பாசனம் மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக 1934-ம் ஆண்டு காவிரியின் குறுக்கே மேட்டூர் அணை கட்டி முடிக்கப்பட்டது. மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந் தேதி காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது வழக்கம். இதன்மூலம் டெல்டா பாசன பகுதிகளான சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 12 மாவட்டங்கள் பயன்பெறும்.

அணையின் நீர்இருப்பை பொறுத்து ஜூன் மாதம் 12-ந் தேதிக்கு முன்னதாகவோ அல்லது தாமதமாகவோ அணையில் இருந்து பாசன தேவைக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இவ்வாறு திறக்கப்படும் தண்ணீர் குறுவை, சம்பா, தாளடி ஆகிய முப்போக பாசன தேவைக்காக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 28-ந் தேதி வரை தொடர்ந்து வழங்கப்படும். இதையடுத்து அணையில் இருந்து தண்ணீர் திறப்பது நிறுத்தப்படும்.

அதன்பிறகு ஒருசில நாட்களுக்கு டெல்டா மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி வீதம் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும். இதேபோன்று சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த கால்வாய் பாசன விவசாயிகளின் தேவைக்காக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் 1-ந் தேதி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும். இவ்வாறு திறக்கப்படும் தண்ணீர் தொடர்ந்து 137 நாட்களுக்கு வழங்கப்படும்.

இந்த ஆண்டு பருவமழை தவறிய போதிலும் தமிழக மற்றும் கர்நாடகம் இடையே காவிரி நீரை பங்கீடு செய்வதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை வழங்கி உள்ளது. அந்த தீர்ப்பின்படி ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் முதல் மே மாதம் வரை 177.25 டி.எம்.சி. தண்ணீரை மாதந்தோறும் பிரித்து வழங்க வேண்டும் என்று கூறியுள்ளது. அதன் அடிப்படையில் ஜூன் மாதம் முதல் அக்டோபர் 10-ந் தேதி வரை கர்நாடகம் 28 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே தமிழகத்துக்கு தந்துள்ளது. அந்த காலகட்டத்திலேயே வழங்கப்பட வேண்டிய தண்ணீரில் 46.9 டி.எம்.சி. தண்ணீர் இன்னும் கர்நாடகத்தில் இருந்து தமிழகத்துக்கு வழங்கப்படவில்லை.

இந்த ஆண்டு பருவமழை கைகொடுக்கவில்லை. அதுமட்டும் அல்லாமல் கர்நாடகமும் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை வழங்காததால் டெல்டா பாசன தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அணையின் நீர் இருப்பு 8 டி.எம்.சி.யாக குறைந்துள்ளதால் ஜனவரி மாதம் 28-ந் தேதி வரை டெல்டா பாசன விவசாயிகளுக்கு தண்ணீர் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கான தண்ணீர் திறப்பு 4 மாதத்திற்கு பிறகு இன்று காலை 6.00 மணி முதல் நிறுத்தப்பட்டது. அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் மீன் வளம், குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளதாகவும் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கன அடி நீர் வெளியேற்றப்படுவதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story