கொடுத்த வாக்குறுதிகளில் 85% நடத்தி முடித்துள்ளோம்.." இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு


கொடுத்த வாக்குறுதிகளில் 85% நடத்தி முடித்துள்ளோம்.. இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
x

ஈரோடு கிழக்கில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

ஈரோடு,

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு நாளை மறுநாள் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அரசியல் தலைவர்கள் பலர் தங்கள் கட்சி வேட்பாளரை ஆதரித்து ஈரோடு கிழக்கு தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று மாலை 5 மணியுடன் பிரச்சாரம் முடிவடைந்தாக கூறப்பட்ட நிலையில் மேலும் ஒரு மணி நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இறுதி நாளான இன்று முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் தங்களது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கில் முதல் அமைச்சர். மு.க.ஸ்டாலின் பிரசாரத்தில் பேசியதாவது; பெரியார் பிறந்த மண்ணில் அனைவரையும் சந்திப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

திராவிட முன்னேற்ற கழகத்தின் கடந்த 2 ஆண்டுகால ஆட்சியில் மக்களுக்கு கொடுத்த பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது. தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகள் போக, ஆட்சியில் அமர்ந்த பிறகும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன.

திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றவில்லை என எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் கூறி வருகின்றனர். குடும்பத்தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கவில்லை என கூறுகின்றனர். அவர்கள் ஆட்சியை விட்டு போகும் போது, கஜானாவை காலிசெய்துவிட்டு சென்றுள்ளனர்.

அதனாலேயே இந்த தாமதம் நிகழ்ந்துள்ளது. ரூ.1000 வழங்கும் திட்டம் உறுதியாக விரைவில் கொண்டுவரப்படும். மார்ச் 2வது வாரத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரில் இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும்.

கொடுத்த வாக்குறுதிகளில் 85 சதவீதம் நடத்தி முடித்துள்ளோம். மீதி உள்ள 15 சதவீதத்தையும் விரைவில் நடத்தி முடிப்போம்.

"இது இடைத்தேர்தல் அல்ல, திராவிட மாடல் ஆட்சியை எடை போடும் தேர்தல். தேர்தல் பிரச்சாரத்திற்கான கூட்டம் போல அல்லாமல், வெற்றி விழாவுக்கான கூட்டம் போல் உள்ளது.

மக்கள் அனைவரும் காங்கிரஸ் வேட்பாளரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு கை சின்னத்தில் வாக்களித்து அவரை வெற்றிபெறச்செய்ய வேண்டும். அவர் சட்டமன்ற உறுப்பினரானதும், அவர் உங்களது கோரிக்கைகளையும், நலத்திட்டங்களையும் விரைந்து நிறைவேற்றுவார். இவ்வாறு அவர் பேசினார்.


Next Story