10.5% இட ஒதுக்கீடு தொடர்பாக சட்டம் கொண்டுவர முதல்-அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளோம்: அன்புமணி ராமதாஸ்


10.5% இட ஒதுக்கீடு தொடர்பாக சட்டம் கொண்டுவர முதல்-அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளோம்: அன்புமணி ராமதாஸ்
x
தினத்தந்தி 9 Oct 2023 11:23 AM IST (Updated: 9 Oct 2023 11:51 AM IST)
t-max-icont-min-icon

வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு தொடர்பாக சட்டம் கொண்டுவர முதல்-அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று சந்தித்துப் பேசினார். இதையடுத்து அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது;

முதல்-அமைச்சரை சந்தித்து சட்டமன்ற கூட்டத்தொடரில் 10.5% இட ஒதுக்கீடு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினோம். வன்னியர் இட ஒதுக்கீடு அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. திமுக அரசு உறுதி செய்தது. சுப்ரீம் கோர்ட்டு வரை சென்று உள் ஒதுக்கீடு முறையான கணக்கீட்டின் படி அமல்படுத்த வேண்டும் என உத்தரவு வெளியானது.

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வந்து ஒன்றரை வருடம் ஆகிறது இன்னும் அந்த சட்டம் அமல்படுத்தப்படவில்லை. தமிழக அரசு இந்த சட்டத்தை அமல்படுத்த பிற்படுத்தப்பட்ட ஆணையம் ஒன்றை அமைத்து எம்பிசி உள் ஒதுக்கீடு செய்ய பரிந்துரை செய்தது. ஆனால் தற்போது வரை எந்த பரிந்துரையையும் அந்த ஆணையம் தமிழக அரசிடம் கொடுக்கவில்லை.

இன்றைய சட்டமன்ற கூட்டத்தொடரிலாவது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வரவேண்டும் என கோரிக்கை வைத்தோம். முதல்-அமைச்சர் கலந்தாலோசித்து முடிவெடுப்பதாக கூறியுள்ளார்.

இது சாதி பிரச்சனை இல்லை. சமுக நீதி பிரச்சனை. தமிழ்நாட்டில் மிகப் பெரிய சமுதாயம் வன்னியர் சமுதாயம். வன்னியர் சமூகத்தினர் 20 மாவட்டங்களில் இருக்கிறார்கள். ஆனால் அந்த மாவட்டங்களில் கடந்த 30 வருடங்களாக அதிக வேலைவாய்ப்பு இல்லை. கல்வி அறிவில் பின்தங்கியுள்ளது. அதிக குடிசைகள் உள்ள மாவட்டங்களாக உள்ளது. அதிக மதுவிற்பனை இருக்கும் மாவட்டம் வடமாவட்டங்கள். இதனைத் தடுக்க புதிய சட்டம் கொண்டு வரலாம். தமிழக அரசுக்கு எண்ணம் இருந்தால் இந்நேரம் கொண்டு வந்து இருப்பார்கள். இந்த எண்ணம் முதல்-அமைச்சருக்கு இருக்கிறதா இல்லையா என பார்க்கலாம்." இவ்வாறு அவர் கூறினார்.


Next Story