'உலகமே வியக்கும் அளவிற்கு செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்திக் காட்டினோம்' - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


உலகமே வியக்கும் அளவிற்கு செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்திக் காட்டினோம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x

நான்கே மாதங்களில் பன்னாட்டுப் போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழ்நாடு அரசு செய்தது என்று முதல்-அமைச்சர் தெரிவித்தார்.

சென்னை,

4-வது உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூவில் நடைபெற்றது. இன்று பிற்பகல் நடைபெற்ற இறுதிப்போட்டியில் எகிப்து-மலேசியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த ஆட்டத்தில் எகிப்து அணி 4-1 என்ற கணக்கில் மலேசிய அணியை வீழ்த்தி எகிப்து அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

இதைத் தொடர்ந்து சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற ஸ்குவாஷ் உலகக் கோப்பை தொடர் பரிசளிப்பு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "கடந்த ஆண்டு உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழ்நாட்டில் நடைபெற்றது. அதன் மூலம் தமிழ்நாடு உலகப் புகழ் அடைந்தது.

இது போன்ற பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கு குறைந்தபட்சம் 18 மாதங்கள் ஆகும் என்பார்கள். ஆனால் நான்கே மாதங்களில் பன்னாட்டுப் போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழ்நாடு அரசு செய்தது. உலகமே வியக்கும் அளவிற்கு போட்டியை நாம் நடத்திக் காட்டினோம்.

தமிழ்நாட்டில் தாம் எப்படி அன்போடும், மரியாதையோடும் கவனிக்கப்பட்டோம் என்பதை உலக செஸ் விளையாட்டு வீரர்கள் சமூக வலைதளங்களில் பதிவு செய்தனர். இதை விட எங்களுக்கு பெரிய பாராட்டு நிச்சயமாக இருக்க முடியாது" என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.



1 More update

Next Story