வார இறுதி நாட்கள், தி.மலை கிரிவலத்தை முன்னிட்டு நாளை 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்


வார இறுதி நாட்கள், தி.மலை கிரிவலத்தை முன்னிட்டு நாளை 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
x

வார இறுதி நாட்கள் மற்றும் திருவண்ணாமலை கிரிவலத்தை முன்னிட்டு நாளை 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

சென்னை,

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:

"28-10-2023 மற்றும் 29-10-2023 ஆகிய விடுமுறை நாட்களை முன்னிட்டு 27-10-2023 அன்று சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலாக பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னையிலிருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு 27-10-2023 அன்று தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 300 சிறப்புப் பேருந்துகளும் மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து அதாவது, கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, சேலம் போன்ற இடங்களிலிருந்து முக்கிய இடங்களுக்கும் மற்றும் பெங்களூரிலிருந்து பிற இடங்களுக்கும் 300 சிறப்பு பேருந்துகளும் ஆக மொத்தம் 600 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி 28-10-2023 அன்று திருவண்ணாமலை கிரிவலத்தை முன்னிட்டு சென்னை, சேலம், கோயம்புத்தூர் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களிலிருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகள் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த வார இறுதியில் பயணம் மேற்கொள்வதற்கு இதுவரை 10,834 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். ஞாயிறு அன்று மட்டும் 10,874 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் தங்களது பயணத்திற்கு முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்." இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story