ராமருக்கும் கிரிக்கெட்டுக்கும் என்ன தொடர்பு இருக்கு? - சீமான் கேள்வி


ராமருக்கும் கிரிக்கெட்டுக்கும் என்ன தொடர்பு இருக்கு? - சீமான் கேள்வி
x

ராமருக்கும் கிரிக்கெட்டுக்கும் என்ன தொடர்பு உள்ளது என நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வியெழுப்பியுள்ளார்.

சென்னை,

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் கடந்த சனிக்கிழமை இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இப்போட்டியே நடுவே, பாகிஸ்தான் அணி வீரர் முகமது ரிஸ்வான் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பும் போது, சில ரசிகர்கள், ஜெய் ஸ்ரீ ராம் என கோஷமிட்டனர்.

இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. இந்த சம்பவம் குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டங்களை தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது;

"பண்டை காலங்களில் இருந்து கோயில் என்பது ஒரு புனிதமான வழிபாட்டு தளம் என கருதி வழிபட்டு வருகிறோம். கோயிலுக்கு சென்று வழிபட்டு வரும் நிலையில், எதற்கு கடவுளை வீதிக்கு தூக்கிட்டு வந்தீர்கள், எதற்கு சாலையில் வைத்து, தண்ணீரில் போடுகிறீர்கள். தற்போது புதிதாக கிரிக்கெட் மைதானம் கட்டி வரும் பாஜக அரசு, அதனை உடுக்கை வடிவிலும், விளக்கு கம்பங்களை சூலம் மாதிரியும் கட்டும்போதே ஜெய் ஸ்ரீ ராம் என கோஷம் போடுறீங்க.

இப்போது இங்கு ஜெய் ஸ்ரீ ராம் கோஷம் போட்டீங்க, நாளை இன்னொரு இஸ்லாமிய நாட்டில் போட்டி நடக்குது, அங்கு அவர்கள் கோஷம் போடுவார்கள், இதுபோன்று கிருஸ்துவ நாட்டில் நடக்குது அங்கு அவர்கள் கோஷம் போடுவார்கள், இதுபோன்ற செயல் கொடுமையானது. ராமருக்கும் கிரிக்கெட்டுக்கும் என்ன சம்மந்தம். விளையாட்டை விளையாட்டாக பார்க்கவேண்டும். விளையாட்டில் இதெல்லாம் பகை என்று பார்த்தால், அதைவிட கொடுமையான செயல் இருக்காது." இவ்வாறு அவர் கூறினார்.


Next Story