வன்னியர் இட ஒதுக்கீடு குறித்த முதல்-அமைச்சரின் உத்தரவாதம் என்னவானது? ராமதாஸ் கேள்வி


வன்னியர் இட ஒதுக்கீடு குறித்த முதல்-அமைச்சரின் உத்தரவாதம் என்னவானது? ராமதாஸ் கேள்வி
x
தினத்தந்தி 31 March 2024 6:16 AM GMT (Updated: 31 March 2024 11:46 AM GMT)

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்ற உத்தரவாதத்தை எப்போது நிறைவேற்றுவீர்கள் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது;

தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்படும் 20 சதவீத இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க எந்தத் தடையும் இல்லை, உரிய தரவுகளைத் திரட்டி இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2022-ம் ஆண்டு இதே நாளில் தான் தீர்ப்பு வழங்கியது. அதன்பின் இரு ஆண்டுகள் நிறைவடைந்து விட்ட நிலையில் இன்று வரை வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை.

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தபோது, ''கண்டிப்பாக வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும். தேவைப்பட்டால் வன்னியர் இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை நிறைவேற்ற சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டுவேன்" என்று உத்தரவாதம் அளித்தார். அதன்பின் பல முறை சட்டப்பேரவையிலும் இது தொடர்பாக வாக்குறுதிகள் அளித்தார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே.... அந்த வாக்குறுதிகள் எல்லாம் என்னவாயின? இது தான் வன்னியர்களுக்கு விரைந்து சமூகநீதி வழங்கும் அழகா? வன்னியர்களுக்கு சமூகநீதி வழங்குவதில் மட்டும் ஏன் இவ்வளவு வன்மம்?

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்ற உத்தரவாதத்தை எப்போது நிறைவேற்றுவீர்கள்? சுப்ரீம் கோர்ட்டே அனுமதி வழங்கியும் கூட வன்னியர்களுக்கு வழங்க வேண்டிய இட ஒதுக்கீட்டை வழங்க மறுக்கும் நீங்கள் சமூக நீதி பற்றி பேசலாமா? அவ்வாறு பேசுவது சமூகநீதிக்கே இழுக்கு அல்லவா?" இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.


Next Story