கல்வெட்டுகளை பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? - தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு


கல்வெட்டுகளை பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? - தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
x

கோவில்கள், மலைகள், பாறைகள் போன்ற இடங்களில் உள்ள கல்வெட்டுகளையும் பாதுகாக்க வேண்டும் என ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழ் கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகள் ஆகியவற்றை பாதுகாக்கும்படி அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக்கோரி உலகத் தமிழ் ஆராய்ச்சி அறக்கட்டளை சார்பில் அதன் தலைவரும், வழக்கறிஞருமான கனகராஜ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கபூர்வாலா, நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தொல்லியல் துறையின் பாதுகாப்பில் உள்ள இடங்கள் தவிர்த்து கோவில்கள், மலைகள், பாறைகள் போன்ற இடங்களில் உள்ள கல்வெட்டுகளையும் பாதுகாக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் அவற்றை வெட்டி எடுத்துவிடுவார்கள் என்றும் குறிப்பிட்டனர்.

இத்தகைய கல்வெட்டுகளை அடையாளம் கண்டு அது குறித்த விவரங்களை கனிம வளத்துறைக்கு தெரிவித்தால்தான் அந்த இடங்களில் குவாரி நடவடிக்கைக்கு அனுமதி வழங்காமல் இருப்பார்கள் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து கல்வெட்டுகளை பாதுகாக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் விசாரணையை வரும் ஏப்ரல் 5-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.




Next Story