தமிழகத்தில் நீட் தேர்வு யார் ஆட்சியில் கொண்டு வரப்பட்டது? - பேரவையில் திமுக, அதிமுக இடையே காரசார விவாதம்


தமிழகத்தில் நீட் தேர்வு யார் ஆட்சியில் கொண்டு வரப்பட்டது? - பேரவையில் திமுக, அதிமுக இடையே காரசார விவாதம்
x

கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சியில் இருந்தவரை நீட் தேர்வு கொண்டு வரப்படவில்லை என சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

சென்னை,

நடப்பு ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் நேற்று முன்தினம் கவர்னர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. முதல்நாளில் கூட்டத்தின் முதல் நாளிலேயே ஆளுநர் ஆர்.என்.ரவி உரையால் பல பரபரப்பு காட்சிகள் அரங்கேறின.

இதனைத் தொடர்ந்து 2-வது நாளாக தமிழக சட்டசபை நேற்று காலை 10 மணிக்கு கூடியது. அப்போது சபாநாயகர் அப்பாவு, மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கான இரங்கல் குறிப்பை படித்தார். இதையடுத்து அவை ஒத்திவைக்கப்பட்டது.

இதையடுத்து இன்று மானியக்கோரிக்கை மீதான விவாதம் சட்டசபையில் நடந்து வருகிறது. கேள்வி நேரம் தொடங்கியது முதலே அவை மிகுந்த பரபரப்புடன் நடைபெற்று வருகிறது. சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்விக்கு துறை அமைச்சர்கள் விரிவாக பதிலளித்து வருகின்றனர்.

இந்தநிலையில், இன்றைய சட்டப்பேரவையில் நீட் தேர்வு குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி இருந்த போதும், ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோதும் தமிழ்நாட்டிற்கு நீட் வரவில்லை. யாருடைய ஆட்சிக் காலத்தில் நீட் நுழைந்தது என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி,

நீட் தேர்வு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்தது என்றும், இன்றைக்கும் தமிழ்நாட்டில் நீட் தேர்வு இருக்கக் கூடாது என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு என்றும் கூறினார்.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருந்த போது நீர் தேர்வு கொண்டு வரப்பட்டது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

அதற்கு பதில் அளித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்,

மத்தியில் பாஜக ஆட்சியில் இருந்தபோதுதான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது, திமுகவை மீறி தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது ஆனால் நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. திமுக ஆட்சியில் இருந்த வரை நீட் தேர்வு கொண்டு வரப்படவில்லை என்றார்.

அதிமுக ஆட்சியில் இருந்த போது உங்களால் ஏன் அதை தடுக்க முடிய வில்லை? என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு கட்டுப்பட்டுதான் ஆக வேண்டும் என்றார்.

ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை அதிமுக ஆட்சியில் நீட் தேர்வை எதிர்த்து வந்ததாக எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார். மேலும், நீட்டை ரத்து செய்ய பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்ததாகவும், அதிமுக ஆட்சியிலும் நீட் தேர்வை ரத்து செய்யும் தீர்மானத்தை அனுப்பி வைத்ததாகவும் தெரிவித்தார்.

அப்போது பேசிய அமைச்சர் மா சுப்பிரமணியன், அதிமுக அனுப்பிய தீர்மானம் ஜனாதிபதி மாளிகையிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டதை சட்டப்பேரவையில் ஏன் சொல்லவில்லை என்று கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், 'நாங்கள் கூட்டணியில் இருந்தபோதும், தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்தபோதும் நீட் தேர்வை வரவிடவில்லை. இதை புரிந்து கொண்டிருந்தால் இவ்வளவு விவாதமே தேவையில்லை' என்று தெரிவித்தார்.


Next Story