பா.ஜ.க.,வுடன் கூட்டணி அமைத்தது ஏன்? ஜி.கே.வாசன் விளக்கம்


பா.ஜ.க.,வுடன் கூட்டணி அமைத்தது ஏன்? ஜி.கே.வாசன் விளக்கம்
x
தினத்தந்தி 26 Feb 2024 5:20 AM GMT (Updated: 26 Feb 2024 8:59 AM GMT)

பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி தேர்தலில் வெல்வதற்கு தமிழ் மாநில காங்கிரஸ் உழைக்கும் என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

சென்னை,

சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

மோடி மீண்டும் பிரதமராக ஆதரவு அளித்து பா.ஜ.க. கூட்டணியில் இடம்பெறுகிறோம். நாளை பல்லடத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறேன் தமிழ்நாடு, தமிழ்மொழி, தமிழர்களை மத்திய பா.ஜ.க. அரசு விரும்புகிறது. விவசாயம், கல்வி, சுகாதாரம், தொழிலுக்கு பா.ஜ.க அரசு முக்கியத்துவம் கொடுக்கிறது.

படித்தவர்கள், இளைஞர்கள் மோடியின் ஆட்சிக்கு ஆதரவு அளிக்கின்றனர். பா.ஜ.க. அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பொருளாதார ரீதியாக நாடு உயரும் என்ற நம்பிக்கை உள்ளது.

வாக்களித்த தமிழக மக்களை தி.மு.க. அரசு ஏமாற்றி வருகிறது. பா.ஜ.க., வுடன் நேற்று நடைபெற்றது மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டுமே.

தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை விரைவில் நடைபெற்று அனைத்தும் நிறைவுபெறும். விரைவில் பல்வேறு கட்சிகள் கூட்டணியில் இணைந்ததும் தொகுதிப்பங்கீடு முழு வடிவம் பெறும். வளமான பாரதம் அமைய விரும்பும் கட்சிகள் அனைத்தும் பா.ஜ.க.கூட்டணியில் இணைய வேண்டும். இவ்வாறு ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

மக்களவைத்தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் இணைந்தது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுடன், த.மா.கா கூட்டணி அமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story