இஸ்லாமியர்கள் விவகாரத்தில் நாங்கள் பேசினால் முதல் அமைச்சருக்கு எரிச்சல், கோபம் வருவது ஏன்.? எடப்பாடி பழனிசாமி கேள்வி


இஸ்லாமியர்கள் விவகாரத்தில் நாங்கள் பேசினால் முதல் அமைச்சருக்கு எரிச்சல், கோபம் வருவது ஏன்.? எடப்பாடி பழனிசாமி கேள்வி
x
தினத்தந்தி 10 Oct 2023 7:51 AM GMT (Updated: 10 Oct 2023 8:34 AM GMT)

இஸ்லாமியர்கள் விவகாரத்தில் நாங்கள் பேசினால் முதல் அமைச்சர் எதற்காக கோபப்படுகிறார் என எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வியெழுப்பியுள்ளார்.

சென்னை,

தமிழக சட்டப்பேரவை கூட்டம் 2-வது நாளாக இன்று நடைபெற்று வருகிறது. அப்போது இஸ்லாமிய கைதிகள் விடுதலை விவகாரத்தில் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தை தொடர்ந்து, சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு செய்தது.

வெளிநடப்பு செய்தவுடன் சட்டப்பேரவை வளாகத்தில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது;

"நீண்டகாலம் சிறையில் இருக்கும் இஸ்லாமிய கைதிகளை வயது மூப்பு, உடல்நலக்குறைவு மற்றும் குடும்பத்தினரின் வேண்டுகோள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, கருணை அடிப்படையில் அரசு பரிசீலனை செய்து விடுதலை செய்யவேண்டும் என்று அதிமுக சார்பாக வலியுறுத்தினேன்.

இதற்கு பதிலளித்து முதல் அமைச்சர் பேசிக்கொண்டிருந்தபோது, திடீரென அதிமுகவிற்கு இஸ்லாமியர்கள் மீது என்ன அக்கறை வந்தது என்ற கேள்வியை எழுப்பினார். தொடர்ந்து அவர், இஸ்லாமியர்களுக்கு அதிமுக அரசு ஒரு துரும்பை கூட கிள்ளிப்போடவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார். அதற்கு நான் பதிலளிக்க முயன்றபோது, சட்டப்பேரவை தலைவர் என்னை பேச அனுமதிக்கவில்லை. இதனை கண்டித்து நாங்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளோம்.

இஸ்லாமியர்களுக்கு அதிமுக ஆட்சிக்காலத்தில் அதிகம் செய்யப்பட்டது. ரமலான் நோன்பிற்கு 5,400 டன் அரிசி அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்டது. ஹஜ் பயணம் மேற்கொள்வதற்கு மத்திய அரசு கொண்டுவந்த 6 கோடி ரூபாய் நிறுத்தப்பட்டது. அதனை ரூ.8 கோடியாக உயர்த்தியது அதிமுக அரசுதான்.

இஸ்லாமியர்களுக்கு நாங்கள்தான் பாதுகாப்பு என்று முதல் அமைச்சர் சொல்கிறார். அப்படியென்றால், இஸ்லாமியர்கள் குறித்து நாங்கள் பேசும்போது முதல் அமைச்சர் ஏன் எரிச்சல் படுகிறார்.. ஏன் கோபப்படுகிறார். சட்டப்பேரவை தலைவர் பேச அனுமதிக்கவில்லை என்பதால் வெளிநடப்பு செய்துள்ளோம்." இவ்வாறு அவர் பேசினார்.


Next Story