பதவி ஆசை இல்லை என்றால் ஓ.பன்னீர்செல்வம் எதற்காக பிரச்சினைகளை உருவாக்குகிறார்; திருச்சியில் எடப்பாடி பழனிசாமி கேள்வி
பதவி ஆசை இல்லை என்றால் ஓ.பன்னீர்செல்வம் எதற்காக பிரச்சினைகளை உருவாக்குகிறார் என்று திருச்சியில் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
செம்பட்டு:
பேட்டி
முன்னாள் அமைச்சர் என்.ஆர்.சிவபதி இல்ல திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்று விட்டு சென்னை செல்வதற்காக திருச்சி விமான நிலையத்துக்கு வந்த முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நிருபர்களிடம் கூறியதாவது:-
ஓ.பன்னீர்செல்வத்தின் நிலைப்பாடு
ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்துள்ளார். அந்த முழு அறிக்கையை சட்டமன்றத்தில் தாக்கல் செய்த பிறகுதான் அதில் கருத்து கூற முடியும். அவர் என்ன விசாரணை மேற்கொண்டார் என்பது தெரியாது. ஆகையால் அது குறித்து கருத்து சொல்வது பொருத்தமாக இருக்காது. அ.தி.மு.க.வில் சசிகலா, டி.டி.வி.தினகரனை மீண்டும் இணைக்க வேண்டும் என்பது ஓ.பன்னீர்செல்வத்தின் நிலைப்பாடு.
அ.தி.மு.க.வில் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றலாமா? வேண்டாமா? என்பது குறித்து தொண்டர்களின் நிலைப்பாடுதான் எனது நிலைப்பாடு. அது எனது தனிப்பட்ட கருத்து அல்ல. எனக்கு முதல்-அமைச்சர் ஆவதற்கோ, கட்சி தலைவராவதற்கோ ஆசை இல்லை என்று கூறும் ஓ.பன்னீர்செல்வம், எதற்கு இவ்வளவு பிரச்சினை செய்கிறார். தலைமை கழகத்துக்குள் புகுந்து அலுவலகத்தை நொறுக்கி, கம்ப்யூட்டர், அறைகளை சேதப்படுத்தியது எதற்காக?. தேவையில்லாமல் ஏன் பிரச்சினைகளை உருவாக்க வேண்டும்.
கூட்டணி கட்சிகள் மவுனம்
8 வழிச்சாலை அமைக்க யார் ஆட்சிக்கு வந்தாலும் நிலத்தை கையகப்படுத்தி தான் சாலை அமைக்க முடியும். இன்று இருக்கிற அதிகாரிகள் தான் அன்றைக்கும் இருந்தார்கள். ஆட்சியில் இருக்கும்போது ஒரு கருத்து, ஆட்சியில் இல்லாதபோது ஒரு கருத்து என்பது தான் தி.மு.க.வின் திராவிட மாடல். ரூ.10 ஆயிரம் கோடியில் தமிழ்நாட்டுக்கு வருகிற திட்டம் இவர்களால் தடுத்து நிறுத்தப்பட்டது. இப்போது என்ன கூறுகிறார்கள். அந்த திட்டம் வருவதில் எங்களுக்கு ஆட்சேனை இல்லை என்கிறார்கள்.
அப்போது தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்த அனைத்து கட்சிகளும் இந்த திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தினார்கள். ஆனால் இப்போது கூட்டணி கட்சிகள் மவுனம் காத்து வருகிறார்கள். இதெல்லாம் வேண்டுமென்றே திட்டமிட்ட சதி செயல். அ.தி.மு.க. ஆட்சியில் இந்த திட்டம் வந்துவிட்டால் அவர்களுக்கு பெயர் கிடைத்து விடும் என்ற கெட்ட எண்ணத்தில் தான் இந்த திட்டத்தை தடுத்து நிறுத்தினார்கள்.
இருபெரும் தலைவர்கள் வழியில் பயணம்
அ.தி.மு.க. என்பது தொண்டர்களின் கட்சி. தொண்டர்களின் விருப்பத்தை தான் நாங்கள் செயல்படுத்துவோம். மக்களுக்கு அ.தி.மு.க. மீது தவறான கருத்து இருந்தால் நான் செல்லுகிற இடங்களுக்கு இவ்வளவு மக்கள் திரளுவார்களா?. எம்.ஜி.ஆர். காலத்திலும் சரி, ஜெயலலிதா காலத்திலும் சரி அ.தி.மு.க. தனித்து நிற்கும் இயக்கம். அந்த இருபெரும் தலைவர்கள் வழியில் தான் பயணித்து கொண்டு இருக்கிறோம்.
காவிரி- குண்டாறு இணைப்பு திட்டம் ரூ.14 அயிரம் கோடியில் தொடங்கி வைக்கப்பட்டது. அ.தி.மு.க. அரசு கொண்டு வந்தது என்பதற்காகவே வேண்டுமென்றே அந்த திட்டத்தை கிடப்பில் போட்டார்கள். எங்களிடம் கோபம் இருந்தால் அதை எங்களிடம் காட்டுங்கள். மக்களின் திட்டங்களை புறக்கணிப்பது நியாயமல்ல. ஆறுகுட்டி போல வேறு எந்த குட்டியும் இனி எங்களை விட்டு போகாது. மக்களிடம் வாக்குறுதிகள் கூறியதை நிறைவேற்ற முடியாததால் தி.மு.க. உள்ளாட்சி பிரதிநிதிகள் மக்களை சந்திக்க முடியவில்லை. அதனால் கூட்டங்களில் இருந்து வெளிநடப்பு செய்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார். அப்போது அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
பிளவுபடுத்த பார்க்கிறார்கள்
முன்னதாக முன்னாள் முதல்-அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு நேற்று காலை 11 மணிக்கு வருகை தந்தார். அங்கு கட்சியினர் அளித்த வரவேற்பை ஏற்றுக்கொண்ட அவர், வயர்லெஸ் சாலையில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் தொண்டர்கள் மத்தியில் அவர் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்து 15 மாதங்கள் ஆகிறது. திருச்சியில் எந்த ஒரு திட்டமாவது அவர் கொண்டு வந்தாரா?. ஜெயலலிதா ஆட்சியில் அவர் கொண்டு வந்த மற்றும் நான் கொண்டு வந்த திட்டங்கள் முடிவுற்ற நிலையில், அதனை ரிப்பன் வெட்டி திறந்து வைக்கின்ற வேலையை மட்டும்தான் அவர் செய்து வருகிறார். ஸ்டிக்கர் ஒட்டும் வேலை மட்டும்தான் நடக்கிறது. இன்றைக்கு தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துக்கொண்டு அ.தி.மு.க.வை பிளவுபடுத்த பார்க்கிறார்கள். இந்த கனவு ஒருபோதும நிறைவேறாது. அவர் (ஓ.பன்னீர் செல்வம்) இந்த இயக்கத்தில் மீண்டும் வந்து இணையும் போது, 10 சதவீதம் பொதுக்குழு உறுப்பினர்களும், 11 எம்.எல்.ஏ.க்களும் மட்டுமே அவர் பக்கம் இருந்தார்கள். ஆனால் நாம் துணை முதல்-அமைச்சர் என்ற பெரிய பதவியை அவருக்கு கொடுத்தோம்.
ஏஜெண்டாக செயல்பட்டவர்
1989-ல் ஜெயலலிதா தன்னந்தனியாக தேர்தலுக்கு வந்தபோது போடிநாயக்கனூரில் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்ட வெண்ணிற ஆடை நிர்மலாவுக்கு அவர் தேர்தல் ஏஜெண்டாக செயல்பட்டவர். நான் சேவல் சின்னத்தில் நின்று எடப்பாடியில் வெற்றி பெற்றேன். 1974 முதல் அணி மாறாமல் இருக்கிறேன். கட்சியை காப்பாற்றும் பொறுப்பில் உள்ள இவரே, ரவுடிகளை கொண்டு கட்சி அலுவலகத்தை சேதப்படுத்தி, முக்கிய ஆவணங்களை திருடிச்சென்றுவிட்டு, தற்போது ஒன்றாக இணைய வேண்டும் என்று விருப்பம் தெரிவிக்கிறார். தொண்டர்களின் மனநிலையை அறிந்தவன் நான். இவரை போல் எத்தனை பேர் வந்தாலும் இந்த இயக்கத்தை ஆட்டவும், அசைக்கவும் முடியாது. தி.மு.க.வோடு கைகோர்த்து இந்த இயக்கத்தை பிளவுபடுத்த நினைப்போருக்கு நீங்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதற்கிடையே சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று திருச்சிக்கு வந்த எடப்பாடி பழனிசாமி, அங்கிருந்து திறந்த வேனில் வெளியே வந்தார். அவருக்கு, விமான நிலைய நுழைவுவாயில் முன், கிரேன் உதவியுடன் ராட்சத மாலை அணிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் வயர்லெஸ் சாலையில் உள்ள பொதுக்கூட்ட மேடைக்கு சென்றார். செல்லும் வழியில் 12 இடங்களில் தொண்டர்கள் நின்று அவருக்கு பூக்களை தூவி வரவேற்பு அளித்தனர்.