என்.எல்.சி.க்காக விவசாயிகளின் நிலங்களை பறிப்பது மக்களுக்கு செய்யும் துரோகம் - அன்புமணி ராமதாஸ்


என்.எல்.சி.க்காக விவசாயிகளின் நிலங்களை பறிப்பது மக்களுக்கு செய்யும் துரோகம் - அன்புமணி ராமதாஸ்
x

என்.எல்.சி.க்காக விவசாயிகளின் நிலங்களைப் பறித்து தருவது மக்களுக்கு செய்யும் துரோகமாகும் என்றும், மண்ணையும், மக்களையும் காப்பதற்காக நடத்தி வரும் போராட்டத்தை பா.ம.க. தொடரும் என்றும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

என்.எல்.சி. நிறுவனம்

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கடலூர் மாவட்டத்தில் வேளாண் விளைநிலங்களை பறிப்பதற்கு எதிராக விவசாயிகளும், மக்களும் தொடர் போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், என்.எல்.சி- 1, 1 ஏ ஆகிய சுரங்கங்களின் விரிவாக்கத்திற்காக மீண்டும் நிலம் கையகப்படுத்துவதற்கான அறிவிக்கைகளை தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது. தமிழகத்தை நாசமாக்கும் என்.எல்.சியின் நடவடிக்கைகளுக்கு தமிழக அரசு துணை போவது கண்டிக்கத்தக்கது.

என்.எல்.சி.யை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் தான் தமிழக அரசு ஈடுபட வேண்டும். அதற்கு மாறாக, என்.எல்.சி. கேட்டவுடன் தனது அதிகாரங்கள் அனைத்தையும் பயன்படுத்தி, அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விட்டு, விவசாயிகளின் நிலங்களைப் பறித்து தருவது மக்களுக்கு செய்யும் துரோகமாகும்.

தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்தபோது, என்.எல்.சி.க்காக நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்தது. சென்னை - சேலம் எட்டு வழிச்சாலைக்காக சுமார் 7 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டபோது, அதற்கு எதிராக போராட்டங்களை நடத்தியது. ஆனால், இப்போது என்.எல்.சி. சுரங்க விரிவாக்கத்திற்காக அரசே நிலங்களை கையகப்படுத்தித் தருவதை தி.மு.க.வின் இரட்டை வேடமாகவே பார்க்க வேண்டியுள்ளது.

பா.ம.க. போராட்டம் தொடரும்

என்.எல்.சிக்காக தமிழக அரசால் கையகப்படுத்தித் தரப்படவுள்ள நிலங்கள் அனைத்தும் முப்போகம் விளையும் நிலங்கள் ஆகும். பொன்விளையும் பூமியை கடலூர் மாவட்ட மக்களிடமிருந்து பறிப்பதற்கு பா.ம.க. ஒருபோதும் அனுமதிக்காது. மண்ணையும், மக்களையும் காப்பதற்காக நடத்தி வரும் போராட்டத்தை பா.ம.க. தொடரும். ஒரு பிடி மண்ணைக் கூட விட்டுத் தராது.

தமிழ்நாடு அரசுக்கு மீண்டும், மீண்டும் நான் வழங்கும் அறிவுரை என்னவென்றால், மக்களின் பக்கம் நில்லுங்கள், மண்ணை நாசமாக்கும் பெரு நிறுவனங்களுக்கு துணை போகாதீர்கள் என்பது தான். அவர்களின் பொறுமைக்கும் எல்லை உண்டு. அந்த எல்லை கடந்தால் மாபெரும் மக்கள் புரட்சி வெடிக்கும். இதை தமிழக அரசு உணர வேண்டும். நிலம் கையகப்படுத்துவதற்கான அறிவிக்கையை திரும்பப் பெற வேண்டும். என்.எல்.சி நிறுவனத்தை தமிழ்நாட்டை விட்டு வெளியேற்றத் தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story