"பள்ளிகளில் மொபைல் மனநல ஆலோசனை மையம் செயல்படாதது ஏன்?" - தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி


பள்ளிகளில் மொபைல் மனநல ஆலோசனை மையம் செயல்படாதது ஏன்? - தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி
x

மொபல் மனநல ஆலோசனை மையம் மாணவ, மாணவிகளுக்கு மிக முக்கியமான ஒன்று என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மதுரை,

மதுரையைச் சேர்ந்த வெர்னிகா மேரி என்பவர் மதுரை ஐகோர்ட் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், கடந்த 2012-ம் ஆண்டு தமிழக அரசு வெளியிட்ட அரசாணையின்படி தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார்கள் பள்ளிகளில் மாணவிகளுக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல்களை தடுக்க மொபைல் மனநல ஆலோசனை மையம் அமைக்க உத்தரவிடப்பட்டது.

இந்த அரசாணையின்படி பள்ளிகளில் மொபல் ஆலோசனை மையங்கள் இயங்குகிறதா என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி கேட்கப்பட்ட கேள்விக்கு முறையாக பதிலளிக்கப்படவில்லை என மனுதாரர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். எனவே இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி அவர் தனது மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த மனு இன்று மதுரை ஐகோர்ட் கிளையின் நிர்வாக நீதிபதி மகாதேவன், நீதிபதி சத்யநாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், '2012-ம் ஆண்டே அரசாணை வெளியிடப்பட்டுவிட்டது, ஆனால் இதுவரை பள்ளிகளில் மொபைல் மனநல ஆலோசனை மையம் முறையாக அனைத்து பள்ளிகளிலும் செயல்படாதது ஏன்?' என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பினர்.

மேலும் மொபல் மனநல ஆலோசனை மையம் மாணவ, மாணவிகளுக்கு மிக முக்கியமான ஒன்று என்று கருத்து தெரிவித்த நீதிபதிகள், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மொபைல் மனநல ஆலோசனை மையம் அமைத்து முறையாக பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மனநல ஆலோசனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.


Next Story