சரக்கு வேன் மோதி கணவன் கண்முன்னே மனைவி பலி
புதுமனை புகு விழாவிற்கு சென்றுவிட்டு வீடு திரும்பியபோது சரக்கு வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதிய விபத்தில் கணவன் கண்முன்னே மனைவி பலியானார்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள கொடிவயல் கிழக்கு கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 45). விவசாயி. இவரது மனைவி கவுசல்யா(42), இவர்கள் 2 பேரும் நேற்று காலை வடகாடு கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு புதுமனை புகு விழாவிற்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து மாலை வீடு திரும்பினர். அப்போது சுப்ரமணியபுரம் கடைவீதியில் சென்று கொண்டு இருந்தபோது, அந்த வழியாக வந்த சரக்கு வேன் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கணேசன் கண்முன்னே கவுசல்யா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கணேசன் படுகாயம் அடைந்தனர். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.