சிறப்பு முகாமிலுள்ள ஜெயக்குமார் முறையற்ற சிகிச்சையால் கண்பார்வையை இழந்தால் திமுக அரசு பொறுப்பேற்குமா? - சீமான்


சிறப்பு முகாமிலுள்ள ஜெயக்குமார் முறையற்ற சிகிச்சையால் கண்பார்வையை இழந்தால் திமுக அரசு பொறுப்பேற்குமா? - சீமான்
x

சிறப்பு முகாமிலுள்ள ஜெயக்குமார் முறையற்ற சிகிச்சையால் கண்பார்வையை இழந்தால் திமுக அரசு பொறுப்பேற்குமா? என சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.

சென்னை,

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்குண்டு, 32 ஆண்டுகால கொடுஞ்சிறைவாசத்துக்குப் பிறகு, விடுவிக்கப்பட்டு திருச்சி, சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள அண்ணன் ஜெயக்குமார் அவர்களுக்குக் கண்பார்வை குறைபாட்டால் சிகிச்சை செய்யப்பட்டபோது, விரைந்து அதனை முடிக்கக்கோரி உளவுத்துறையினர் கொடுத்த நெருக்கடியினால் அவசரகதியில் மருத்துவம் செய்யப்பட்டதால், பார்வைத்திறன் மேலும் மோசமடைந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

சென்னை, எழும்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வரும் அண்ணன் ஜெயக்குமார் அவர்களுக்கு இந்நிலை ஏற்படக் காரணமான அரசு அதிகாரிகளுக்கும், ஆட்சியாளர்களுக்கும் எனது கண்டனத்தைத் தெரிவிக்கிறேன்.

மருத்துவச் சிகிச்சைக்குக்கூட போதிய காலநேரம் அளிக்காது, நெருக்கடி அளித்ததன் விளைவாகவே அண்ணன் ஜெயக்குமார் அவர்களுக்குத் தற்போது கண்பார்வைப் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது மறுக்கவியலா உண்மையாகும்.

முறையற்ற சிகிச்சையால் ஒருவேளை அவர் கண்பார்வையை இழந்தால், அதற்கு யார் பொறுப்பேற்பது? திமுக அரசு ஏற்குமா? பேரவலம்! ஆறு தமிழர்களும் உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டபோதும், சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கவிடாது, சிறப்பு முகாம் எனப்படும் சித்திரவதைக் கூடத்தில் அவர்களில் நால்வரை அடைத்து வைத்து, கடும் நெருக்கடிகளையும், உளவியல் ரீதியான அழுத்தங்களையும் கொடுத்து வரும் திமுக அரசின் தொடர் செயல்பாடுகள் ஏற்கவே முடியாத பெருங்கொடுமையாகும்.

தண்டனைப் பெற்று சிறையிலிருக்கும் ஒரு சிறைவாசிக்குக் கொடுக்கப்படும் குறைந்தபட்சமான உரிமைகளும், வாய்ப்புகளும்கூட மறுக்கப்பட்டு, சிறப்பு முகாமில் அவர்களை அடைத்து வைத்திருப்பது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும்.

32 ஆண்டுகளில் மொத்த இளமைக்காலத்தையும் சிறைக்கொட்டடிக்குள் தொலைத்துவிட்டு, உடலியல் சிக்கல்களோடும், மனஉளைச்சலோடும் வெளிவந்திருக்கும் அவர்களை எஞ்சியிருக்கும் வாழ்க்கையையாவது மனஅமைதியோடு வாழ வழிவிடுவதே மனிதநேயமாகும்.

அதனால், சிறப்பு முகாமிலிருந்து அவர்களை மாற்றிடத்தில் தங்க வைப்பதற்குரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டுமெனவும், அதற்கிடையே, திருச்சி சிறப்பு முகாமுக்குள் அவர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் கெடுபிடிகளைத் தளர்த்தி, குறைந்தபட்சமாக சுதந்திரமான ஒரு பொதுவெளியை உருவாக்க வேண்டுமெனவும் கோருகிறேன்.

இத்தோடு, மாவட்ட ஆட்சியர், உளவுத்துறையினர் மற்றும் அரசு அதிகாரிகளின் அலட்சியத்தாலும், நெருக்கடியினாலும் கண்பார்வைத்திறன் பாதிக்கப்பட்ட அண்ணன் ஜெயக்குமார் அவர்களுக்கு ஏற்பட்டப் பாதிப்பைச் சரிசெய்ய வேண்டியது அரசின் தார்மீகக்கடமை என்பதையும் நினைவூட்டுகிறேன்.

ஆகவே, அண்ணன் ஜெயக்குமார் அவர்களது கண் பார்வைத்திறன் குறைபாட்டினைச் சரிசெய்ய உயர்தர சிகிச்சை அளிக்க உடனடியாக அரசு ஏற்பாடு செய்ய வேண்டுமெனவும், திருச்சி, சிறப்பு முகாமுக்குள் அவர்களுக்குக் கொடுக்கப்படும் நெருக்கடிகளை முழுமையாகத் தளர்த்த வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.




Next Story