நமது அறிவியல் சமூகத்துக்கு இந்த ஆண்டு வெற்றிகரமானதாக அமைய வாழ்த்துகள் - கவர்னர் ஆர்.என்.ரவி
பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட நிலையில் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை,
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து, பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட் இன்று காலை 9.10 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இதில், 'எக்ஸ்போசாட்' என்ற செயற்கைக்கோள் பொருத்தப்பட்டு விண்ணில் ஏவப்பட்டது. இந்த செயற்கைக்கோள் பூமியில் இருந்து 650 கிலோ மீட்டர் உயரத்தில் புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது.
பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட நிலையில் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "ஒவ்வொரு பாரதியருக்கும் புத்தாண்டுக்கு இதை விட சிறந்த தொடக்கம் வேறென்ன இருக்க முடியும்!
நமது விண்மீன் மண்டலத்தில் உள்ள கருந்துளைகள் மற்றும் நியூட்ரான் நட்சத்திரங்களை ஆய்வு செய்வதற்காக எக்ஸ்போசாட் என்ற சிறப்பு வானியல் கண்காணிப்பு செயற்கைக்கோளை வரலாற்று சிறப்புமிக்க வகையில் ஏவிய நமது இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். நமது அறிவியல் சமூகத்துக்கு இந்த ஆண்டு வெற்றிகரமானதாக அமைய வாழ்த்துகள்" என்று தெரிவித்துள்ளார்.