ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்காமல், அதனால் நிகழும் தற்கொலைகளை தடுக்க முடியாது - அன்புமணி ராமதாஸ்


ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்காமல், அதனால் நிகழும் தற்கொலைகளை தடுக்க முடியாது - அன்புமணி ராமதாஸ்
x

திருச்சி அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் 4 லட்சத்தை இழந்த வில்சன் என்பவர் தற்கொலை செய்து கொண்டார். புதிய சட்டம் இயற்றப்பட்ட பிறகு நிகழ்ந்த இரண்டாவது தற்கொலை ஆகும்.

திருச்சி,

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட டுவிட்டர் பதிவில்,

திருச்சி மாவட்டம் மணப்பாறை அஞ்சல்காரன்பட்டியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி வில்சன் என்பவர், ஆன்லைன் சூதாட்டத்தில் 4 லட்சத்தை இழந்து கடனாளி ஆனதால் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திருச்சி திருவெறும்பூரில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த ரவிச்சந்திரன் என்பவர் தற்கொலை செய்து கொண்ட சோகம் மறையும் முன்பே அடுத்த தற்கொலை நிகழ்ந்துள்ளது. ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்காமல், அதனால் நிகழும் அப்பாவிகளின் தற்கொலைகளையும் தடுக்க முடியாது.

ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையானவர்களால் அதிலிருந்து மீளவே முடியாது. ஆன்லைன் சூதாட்டம் திறமையின் அடிப்படையிலானது; அது அடிப்படை உரிமை என்பது போன்ற கருத்துகள் மனிதகுலத்திற்கு எதிரானவை. ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களின் முகவர்களால் பரப்பப்படுபவை.

ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் செல்லாது என அறிவிக்கப்பட்ட பிறகு நிகழ்ந்த 49-ஆவது தற்கொலை இது. திருப்பி அனுப்பப்பட்ட சட்டம் இயற்றப்பட்ட பிறகு நிகழ்ந்த 20-ஆவது தற்கொலை. புதிய சட்டம் இயற்றப்பட்ட பிறகு நிகழ்ந்த இரண்டாவது தற்கொலை. இது தொடர்கதையாகிவிடக்கூடாது.

ஆளுனரால் திருப்பி அனுப்பப்பட்ட ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டம் மீண்டும் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், அதற்கு ஒப்புதல் அளிப்பதைத் தவிர ஆளுனருக்கு வேறு வாய்ப்பில்லை. அரசியல் சட்டப்படியான அந்தக் கடமையை ஆளுனர் உடனடியாக செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.




Next Story