வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வீடுகள் பெற்று தருவதாக கூறி 104 பேரிடம் ரூ.89 லட்சம் மோசடி செய்த பெண் கைது


வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வீடுகள் பெற்று தருவதாக கூறி 104 பேரிடம் ரூ.89 லட்சம் மோசடி செய்த பெண் கைது
x

வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வீடுகள் பெற்று தருவதாக கூறி 104 பேரிடம் ரூ.89 லட்சம் மோசடி செய்த பெண் கைது செய்யப்பட்டார். மற்றொரு சம்பவத்தில் நில மோசடி செய்த 2 பேர் சிக்கினர்.

சென்னை

சென்னை ராமாபுரம் பூத்தபேடு மெயின் ரோடு அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் கவுதமன் (வயது 35). இவரிடம் சென்னை ராமாபுரம் நாயுடு தெருவை சேர்ந்த சுப்ரமணியன், குமணன்சாவடியை சேர்ந்த செல்வம், அம்பத்தூரை சேர்ந்த நித்தியா என்ற பெண் ஆகிய 3 பேரும் சேர்ந்து காஞ்சீபுரம் மாவட்டம் படப்பையில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் வீடுகள் பெற்று தருவதாக கூறியுள்ளனர்.

மேலும் அதற்காக அரசாங்கத்திற்கு முன்பணமாக செலுத்த வேண்டும் எனக்கூறி ரூ.85 ஆயிரத்தை கவுதமனிடம் இருந்து பெற்றுக் கொண்டுள்ளனர். அதன்பின்னர் நித்தியா என்பவரின் வீட்டில் வைத்து கவுதமனிடம் அரசு முத்திரையுடன் கூடிய போலியான ஒப்புகை சீட்டை கொடுத்துள்ளனர்.

இதுகுறித்து கவுதமன் விசாரித்த போது போலியான ஒப்புகை சீட்டு கொடுத்து ஏமாற்றியது தெரியவந்தது. இதுகுறித்து கவுதமன் ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் உத்தரவின் பேரில், துணை போலீஸ் கமிஷனர் பெருமாள் ஆலோசனைப்படி, உதவி போலீஸ் கமிஷனர் பொன்சங்கர் மேற்பார்வையில் போலி ஆவண தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், சுப்பிரமணியன், செல்வம், நித்யா ஆகிய 3 பேரும் சேர்ந்து கவுதமன் உள்பட சுமார் 104 பேரிடம் மொத்தம் ரூ.89 லட்சத்து 25 ஆயிரம் வரை பணத்தை பெற்றுக் கொண்டு மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதுகுறித்து ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலி ஆவண தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான அம்பத்தூர் அடுத்த கள்ளிகுப்பத்தை சேர்ந்த நித்தியா(43) என்ற பெண்ணை கைது செய்து பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

அதேபோல் சென்னை நெற்குன்றம் கோல்டன் ஜார்ஜ் நகரை சேர்ந்தவர் தசரதன் (70). இவர் சென்னை புழல் பகுதியில் நீலகண்ட நகர் 2-வது பிரிவில் அடங்கிய பிளாட்டில் 1,815 சென்ட் நிலத்தை அம்பத்தூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் கிரையம் செய்து வைத்துள்ளார்.

இந்த நிலையில் இவரது நிலத்தை வேறு ஒருவர் பெயரில் போலி ஆவணம் தயாரித்து மோசடி செய்த ஸ்ரீபெருமந்தூர் அடுத்த தண்டலத்தை சேர்ந்த ஹரிகோபால் (46) மற்றும் சென்னை வியாசர்பாடி பி.வி.காலனியை சேர்ந்த ஷீலா (63) ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மோசடி செய்யப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ.70 லட்சம் என்று கூறப்படுகிறது.


Next Story