கொடுங்கையூர் குப்பை கிடங்கில் பொக்லைன் எந்திரம் மோதி பெண் பலி - கணவர் கண் எதிரே பரிதாபம்


கொடுங்கையூர் குப்பை கிடங்கில் பொக்லைன் எந்திரம் மோதி பெண் பலி - கணவர் கண் எதிரே பரிதாபம்
x

கொடுங்கையூர் குப்பை கிடங்கில் பொக்லைன் எந்திரம் மோதி கணவர் கண் எதிரேயே பெண் பலியானார்.

சென்னை

சென்னை கொருக்குப்பேட்டை மீனாம்பாள் நகர் விநாயகம் 6-வது தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ். இவருடைய மனைவி பார்வதி (வயது 45). இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.

கணவன்-மனைவி இருவரும் கொடுங்கையூர் மாநகராட்சி குப்பை கிடங்கில் லாரிகளில் சேகரித்து கொண்டு வந்து கொட்டப்படும் குப்பைகளில் இருந்து பிளாஸ்டிக் மற்றும் இரும்பு பொருட்களை பிரித்து எடுத்து அதை பழைய இரும்பு கடையில் விற்று அதில் கிடைக்கும் பணத்தில் குடும்பம் நடத்தி வந்தனர்.

நேற்று காலை ரமேஷ்-பார்வதி இருவரும் குப்பை கிடங்கில் வழக்கம்போல் பிளாஸ்டிக் மற்றும் இரும்பு பொருட்களை சேகரித்து கொண்டு இருந்தனர். அப்போது அங்கு லாரிகளில் இருந்து கொட்டப்பட்ட குப்பைகளை மாநகராட்சி பொக்லைன் எந்திரம் மூலம் சமன்படுத்தும் பணியில் அதன் டிரைவரான மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் கோயம்பேட்டை சேர்ந்த கதிர்வேல் (33) என்பவர் ஈடுபட்டு இருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக அங்கு குப்பை பொறுக்கி கொண்டிருந்த பார்வதி மீது பொக்லைன் எந்திரம் மோதியது. இதில் படுகாயம் அடைந்த பார்வதி, கணவர் கண் எதிரேயே பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த கொடுங்கையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் பார்வதியின் உடலை பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பொக்லைன் எந்திரம் டிரைவர் கதிர்வேலை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story