விவசாய நிலத்தில் காட்டுப்பன்றிக்காக அமைத்த மின் வேலியில் சிக்கி பெண் பலி


விவசாய நிலத்தில் காட்டுப்பன்றிக்காக அமைத்த மின் வேலியில் சிக்கி பெண் பலி
x
திருவள்ளூர்

பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு தாலுகா கரிம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் சிட்டியம்மாள் (வயது 53). இவரது கணவர் முருகையா இறந்து விட்டார். இவரது 3 மகள்களுக்கும் திருமணம் ஆகிவிட்டதால் சிட்டியம்மாள் தனியாக வசித்து வருகிறார்.

அதே கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவருடன் சிட்டியம்மாளுக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நட்பாக பழகிய நிலையில் நேற்று காலை வெங்கடேசன் சிட்டியம்மாளுக்கு போன் செய்து தனக்கு உணவு கொண்டு வரும்படி கூறியதாக தெரிகிறது. சிட்டியம்மாள் உணவை எடுத்து கொண்டு வெங்கடேசனுக்கு கொடுக்க சென்றார். மூர்த்தி என்ற விவசாயி தனது வயலில் பயிரிட்ட வேர்க்கடலை பயிரை காட்டு விலங்குகள் நாசம் செய்யாமல் இருக்க மின் வேலி அமைத்து இருந்தார்.

அந்த வழியாக சிட்டியம்மாள் சென்றபோது மின்சாரம் தாக்கி அதே இடத்தில் இறந்ததாக கூறப்படுகிறது. பின்னர் இறந்த சிட்டியம்மாளின் உடலை மர்ம நபர் ஒருவர் எடுத்து பக்கத்தில் இருந்த கிணற்றில் போட்டு விட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பள்ளிப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் மின்வேலியில் சிக்கி இறந்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா, அவரை கிணற்றில் தூக்கி வீசியது யார்? என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.


Next Story