திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலி; பஸ்சுக்காக காத்திருந்தவருக்கு நேர்ந்த சோகம்

திருவள்ளூர் அருகே பின்னால் வந்த கார் மோதி மோட்டார் சைக்கிள் சாலையோரம் பஸ்சுக்காக காத்து கொண்டிருந்த பெண் மீது மோதியது இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
பெண் பலி
திருவள்ளூர் அடுத்த வலசைவெட்டிக்காடு கிராமம், பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் மணி. இவரது மனைவி துளசி (வயது 58). இவர் நேற்று முன்தினம் திருவள்ளூர் செல்வதற்காக மணவாளநகர் அடுத்த போளிவாக்கம் பஸ் நிறுத்தம் அருகே சாலையோரத்தில் நின்று கொண்டிருந்தார். அப்பொழுது ஸ்ரீபெரும்புதூரில் இருந்து திருவள்ளூர் நோக்கி வந்த கார் ஒன்று முன்னால் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் சாலையோரத்தில் நின்ற துளசி மீது மோதினர். இதில் துளசி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் மோட்டார் சைக்கிளில் சென்ற செல்வமணி மற்றும் சுதானந்தம் ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு வந்த மணவாளநகர் போலீசார் துளசி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளுவர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
திருவள்ளூர் முகமது அலி தெருவை சேர்ந்தவர் சாயின்ஷா (29). இவருக்கு ரிஸ்வானா என்ற மனைவியும், ஒரு வயதில் பெண் குழந்தையும் உள்ளது. கணவன்- மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ரிஸ்வானா கோபித்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு குழந்தையுடன் சென்று விட்டார். இதனால் மனவிரக்தியில் இருந்த சாயின்ஷா நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு சென்ற திருவள்ளூர் டவுன் போலீசார் தற்கொலை செய்து கொண்ட சாயின்ஷா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.