திருச்செந்தூரில் குழந்தையை கடத்திய பெண், போலீஸ் நிலையத்தில் மயங்கி விழுந்து சாவு


திருச்செந்தூரில் குழந்தையை கடத்திய பெண், போலீஸ் நிலையத்தில் மயங்கி விழுந்து சாவு
x

திருச்செந்தூரில் குழந்தையை கடத்திய பெண், போலீஸ் நிலையத்தில் மயங்கி விழுந்து இறந்து போனார். இதுதொடர்பாக போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த பரபரப்பு சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

குழந்தை கடத்தல்

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த முத்துராஜ் என்பவர் தனது மனைவி, 1½ வயது குழந்தை ஹரீஷ் மற்றும் குடும்பத்தினருடன் குலசை முத்தாரம்மன் கோவிலுக்கு வந்தார். பின்னர் அவர்கள் அங்கிருந்து திருச்செந்தூர் கடலில் குளிப்பதற்காக வந்தனர். அப்போது முத்துராஜ் கடைக்கு சென்றார். இந்த நிலையில் 1½ வயது குழந்தை அழுது கொண்டே இருந்தது. அப்போது குளிக்க வந்த இடத்தில் பழக்கமான 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் குழந்தைக்கு ஐஸ் கிரீம் வாங்கிக்கொடுப்பதாக தூக்கிச்சென்றார். பின்னர் அந்த பெண்ணையும், குழந்தையையும் காணவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த முத்துராஜ் இதுகுறித்து திருச்செந்தூர் முருகன் கோவில் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் கோவில் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் 40 வயது பெண், ஆண் ஒருவருடன் குழந்தையை மோட்டார் சைக்கிளில் கடத்தி செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.

தம்பதி கைது

இந்த காட்சிகளை வைத்து போலீசார் விசாரணையை தொடங்கினர். தொடர்ந்து மோட்டார் சைக்கிளின் பதிவு எண், பதிவு எண்ணுடன் இணைக்கப்பட்ட செல்போன் எண் மற்றும் அவர்கள் தொடர்பான தகவலை திருச்செந்தூர் போலீசார் அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் குழந்தையை கடத்தி சென்றது தம்பதி என்பது தெரியவந்தது.இதற்கிடையில் குழந்தையை கடத்திய தம்பதி கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து திருச்செந்தூர் போலீசார், கோவை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இந்த தகவலின் பேரில் ஆலாந்துறை போலீசார் பூண்டி முட்டத்துவயல் குளத்தேரி அருகே பதுங்கியிருந்த பெண்ணையும், அவரது கணவரையும் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த பாண்டியன் (வயது 45), அவருடைய மனைவி திலகவதி (40) என்பதும், 1½ வயது குழந்தையை கடத்தியதையும் ஒப்புக்கொண்டனர். ஆனால் அவர்களிடம் குழந்தை இல்லை. அதுகுறித்து கேட்டபோது, சேலத்தில் உள்ள வீட்டில் தங்களது உறவினர்களிடம் விட்டுவிட்டு கோவை வந்ததாக தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

போலீஸ் நிலையத்தில் பெண் சாவு

பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்தவும், திலகவதியையும், பாண்டியனையும் ஆத்தூர் அழைத்துச்சென்று குழந்தையை மீட்க போலீசார் நடவடிக்கை எடுக்க முயன்றனர். இதற்காக அவர்கள் 2 பேரையும் ஆலாந்துறை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர் தம்பதியிடம் போலீசார் விசாரணையை தொடங்கினர். அப்போது திலகவதி போலீஸ் நிலையத்தில் உள்ள கழிவறைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். அங்கு அவர் திடீரென மயங்கி விழுந்தார். உடனே அங்கிருந்த போலீசார் அவரை மீட்டு, போளுவாம்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்துவிட்டார்.

போலீஸ் அதிகாரிகள் விசாரணை

இதுபற்றிய தகவல் அறிந்ததும் போலீஸ் அதிகாரிகள், ஆலாந்துறை போலீஸ் நிலையத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் திலகவதி இறப்பு குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்து வந்த பெண், திடீரென மயங்கி விழுந்து இறந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story