கிராம நிர்வாக அலுவலகத்தை பெண்கள் முற்றுகை


கிராம நிர்வாக அலுவலகத்தை பெண்கள் முற்றுகை
x
தினத்தந்தி 12 Oct 2023 7:09 PM GMT (Updated: 12 Oct 2023 7:38 PM GMT)

கொத்தமங்கலத்தில் மகளிர் உரிமைத்தொகை கேட்டு கிராம நிர்வாக அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர்.

புதுக்கோட்டை

மகளிர் உரிமைத்தொகை

தமிழ்நாடு முழுவதும் பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தில் விண்ணப்பம் வழங்கப்பட்டு உடனடியாக தன்னார்வலர்கள் மூலம் இணைய வழியில் பதிவேற்றம் செய்யப்பட்டு அடுத்த சில நாட்களில் கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய்த்துறையினர் மூலம் வீடுவீடாகச் சென்று சரிபார்க்கப்பட்டது. செப்டம்பர் 15-ந் தேதி முதல் உரிமைத்தொகை அவர்களின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படும் என்று அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில் மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000 குடும்பத் தலைவிகளின் வங்கி கணக்கில் வரவானது. ஆனால் ஒவ்வொரு கிராமத்திலும் 10 முதல் 20 சதவீதம் பேருக்கு உரிமைத் தொகை கிடைக்கப்பெறவில்லை. இதனால் வங்கிகளுக்கும் வருவாய்த்துறை அலுவலகங்களுக்கும் பலர் சென்று அலைந்துள்ளனர்.

முற்றுகை

இந்த நிலையில் உரிமைத்தொகை கிடைக்க பெறாதவர்களுக்கு என்ன காரணத்திற்காக விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது என்பதை இணையதளத்தில் பார்த்து 30 நாட்களுக்குள் சரி செய்து கொள்ளலாம் என்று அறிவித்துள்ளனர். அதன்படி மீண்டும் இணைய வழியாக பெண்கள் மேல்முறையீடு செய்து வருகின்றனர். இந்த நிலையில் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் கிழக்கு கிராமத்தில் ஏராளமான பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்கவில்லை என்று கூறி சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் கொத்தமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கீரமங்கலம் போலீசார் மற்றும் துணை தாசில்தார் ரமேஷ், கிராம நிர்வாக அலுவலர் ஆரோக்கியநாதன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் முற்றுகையிட்ட பெண்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உங்கள் விண்ணப்பங்களை இணைய தளத்தில் சரிபார்த்து திருத்தம் செய்தால் உடனே சரியாகும். உரிமைத் தொகை கிடைக்கும் என்று கூறினர். இதையடுத்து பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story