கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் விஷவாயு தாக்கி தொழிலாளி சாவு


கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் விஷவாயு தாக்கி தொழிலாளி சாவு
x

கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் தனியார் தொழிற்சாலையில் கழிவுநீர் தொட்டியின் அடைப்பை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி கூலித்தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னை

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள சிட்கோவில் தனியாருக்கு சொந்தமான பெட்ரோல் நிலைய தொட்டிகளில் பயன்படுத்தப்படும் உலோக பட்டைகள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை உள்ளது.

இந்த தொழிற்சாலையையொட்டி மழைநீர் கால்வாயுடன் இணைந்த, பக்கவாட்டில் உள்ள கழிவுநீர் தொட்டி அடைப்பை சுத்தம் செய்யும் பணியில் புதுகும்மிடிப்பூண்டியை சேர்ந்த அரி (வயது 34), பலராமன் (52) மற்றும் கோவிந்தன் (46) ஆகியோர் நேற்று ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அந்த கழிவுநீர் தொட்டி யில் கழிவுநீர் இல்லாவிட்டாலும் பல ஆண்டுகளாக அடைக்கப்பட்டிருந்த நிலையில், அதில் இருந்து வெளியான விஷவாயு தாக்கி கூலித்தொழிலாளி அரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்தில் இறந்த அரிக்கு செல்வி (26) என்ற மனைவியும், ஜெனிதா (3) என்ற மகளும் உள்ளனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புகழேந்தி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.


Next Story