இந்தியாவின் இளைய சமூகத்தை உலகம் உற்று நோக்குகிறது - பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பேச்சு


இந்தியாவின் இளைய சமூகத்தை உலகம் உற்று நோக்குகிறது - பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பேச்சு
x
தினத்தந்தி 29 July 2022 6:14 AM GMT (Updated: 29 July 2022 6:19 AM GMT)

இந்தியாவின் இளைய சமூகத்தை உலகம் உற்று நோக்குகிறது என அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பேசினார்.

சென்னை:

பிரதமர் மோடி 2 நாள் பயணமாக நேற்று சென்னை வந்திருந்தார். நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற 'செஸ்' ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சி முடிந்ததும் கிண்டி கவர்னர் மாளிகைக்கு சென்று தங்கினார்.

இந்நிலையில், தமிழ்நாட்டின் முன்னணி உயர்கல்வி நிறுவனமான அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழாவில் இன்று பிரதமர் மோடி பங்கேற்றார். இதற்காக இன்று காலை 9.55 மணிக்கு கவர்னர் மாளிகையில் இருந்து பிரதமர் மோடி கார் மூலம் புறப்பட்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள விவேகானந்தர் அரங்குக்கு வந்தார். அவரை பல்கலைக்கழகத்தின் வேந்தரான கவர்னர் ஆர்.என்.ரவி வாசலில் நின்று வரவேற்றார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், துணைவேந்தர் வேல்ராஜ் ஆகியோரும் வரவேற்றனர்.

பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி தலைமை விருந்தினராக பங்கேற்பதால் அங்குள்ள அறைக்கு சென்று பட்டமளிப்பு விழாவுக்கான அங்கி அணிந்து வந்தார். அவருடன் கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, மத்திய மந்திரி எல்.முருகன் ஆகியோரும் அங்கி அணிந்து வந்திருந்தனர்.

பட்டமளிப்பு விழா மேடைக்கு சரியாக காலை 10 மணிக்கு வந்ததும் விழா நிகழ்ச்சிகள் தொடங்கியது. விழாவுக்கு வந்த அனைவரையும் துணைவேந்தர் வேல்ராஜ் வரவேற்று பேசினார். இதைத் தொடர்ந்து கவர்னர் ஆர்.என்.ரவி தலைமையில் பட்டமளிப்பு விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் பல்கலைக்கழக அளவில் பல்வேறு துறைகளில் ஆராய்ச்சி படிப்புகளில் முதலிடம் பெற்ற 69 மாணவ-மாணவிகளுக்கு பிரதமர் மோடி தங்கத்தால் ஆன பதக்கங்களை வழங்கினார்.

இந்த 69 மாணவர்களில் 31 பேர் அண்ணா பல்கலைக்கழகத்தின் வளாக கல்லூரிகளில் படித்தவர்கள். மீதமுள்ள 38 பேர் இதர பொறியியல் கல்லூரிகளில் பல்வேறு துறைகளில் படித்து முதலிடம் பிடித்தவர்கள்.

பட்டமளிப்பு விழாவில் கவுரவ விருந்தினராக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றினார். இறுதியாக பிரதமர் மோடி விழா பேரூரை நிகழ்த்தினார்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவுக்கு பிறகு 70 ஆண்டுக்கு பின் முதல் முறையாக பிரதமர் மோடி தலைமை விருந்தினராக பங்கேற்று பதக்கங்கள் வழங்கி உள்ளார்.

பிரதமர் மோடி அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றதால் அதை சுற்றி உள்ள பகுதிகளில் 7 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

'அனைவருக்கும் வணக்கம்' என தமிழில் உரையை தொடங்கிய பிரதமர் மோடி நாளைய தலைவர்களை உருவாக்குவதில் ஆசிரியர்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. இந்தியாவின் இளைய சமூகத்தை உலகம் உற்று நோக்குகிறது. மின்னணு பொருட்கள் உற்பத்தியில் உலகிலேயே இந்தியா 2 வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.உலக அளவில் வாய்ப்புகளை உருவாக்கும் நாடாக இந்தியா மாறி உள்ளது.

தொழில்முனைவோர் அதிகளவில் உருவாகி வருகின்றனர். 'ரிஸ்க்' எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நீங்கள் 'ரிஸ்க்' எடுக்க வேண்டும்; இல்லாவிட்டால் உங்களுக்கான வாய்ப்பை இழந்துவிடுவீர்கள்.

வலிமையான அரசு தொழில்முனைவோராக விரும்புவர்களுக்கு செவி சாய்க்கிறது, உதவுகிறது;.சூழலுக்கேற்ப முடிவுகளை எடுக்கவும், படிப்புகளை தேர்வு செய்யவும் தேசிய கல்விக் கொள்கை உதவுகிறது என கூறினார்.


Next Story