பட்டா மாறுதலுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்


பட்டா மாறுதலுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்
x

பட்டா மாறுதலுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுக்கோட்டை

பட்டா மாறுதலுக்கு...

தமிழ்நாடு நிலஅளவை மற்றும் நிலவரித்திட்ட துறை www.tnlandsurvey.tn.gov.in என்ற இணையதளத்தை உருவாக்கியுள்ளது. அதில், பட்டாமாறுதல் 'தமிழ்நிலம்' செயலி இணைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் பட்டா மாறுதல் கோரி விண்ணப்பிக்கும் இணையவழி சேவை Tamil Nilam Citizen portal https://tamilnilam.tn.gov.in/citizen/ இணைக்கப்பட்டுள்ளது.

உட்பிரிவு மற்றும் உட்பிரிவில்லாத பட்டா மாறுதல் கோரிவரும் விண்ணப்பங்களை உடனுக்குடன் செயல்படுத்த தமிழ்நிலம் (ஊரகம்), தமிழ்நிலம் (நகரம்) மென்பொருள்கள் உருவாக்கப்பட்டன.

இதனை தொடர்ந்து புலப்படங்களிலும் அனைத்து உட்பிரிவு மாற்றங்கள் கொண்டு வர ஏதுவாக கொலாப்லேண்ட் மென்பொருள் உருவாக்கப்பட்டு இந்த இணையதளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

இணையவழி சேவை

பட்டா, சிட்டா பார்வையிட மற்றும் சரிபார்க்க, அ-பதிவேடு, அரசு புறம்போக்கு நிலவிவரம், புலப்படம், நகர நிலஅளவை வரைபடங்கள் ஆகியவற்றை இலவசமாக பார்வையிட பதிவிறக்கம் மற்றும் பட்டாமாறுதல் விண்ணப்ப நிலை விவரங்களை அறியும், எங்கிருந்தும் எந்நேரத்திலும் இணையவழி சேவை (www.eservices.tn.gov.in) இணைக்கப்பட்டுள்ளது.

மேலும், ஸ்கேன் செய்யப்பட்ட கிராம வரைபடங்கள் விற்பனை, தொடர்பு விளக்கப்பட்டியல்கள் விவரங்கள் போன்றவை பதிவிறக்கம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்கள், வட்டங்கள், கிராமங்கள், மாநகராட்சிகள், நகராட்சிகளின் விவரங்கள், இத்துறையின் முக்கிய அரசாணைகள், சுற்றறிக்கைகள், பரப்பளவு மற்றும் அளவு மாற்றங்கள் போன்றவை அறியலாம்.

எனவே பொதுமக்கள் மேல்குறிப்பிட்டுள்ள இணையதளம் மற்றும் தமிழ் நிலம் செயலி மூலம் நிலஅளவைத்தொடர்பான விவரங்களை பார்வையிட்டு பயனடையலாம்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.


Next Story