கூடலூரில் பரிதாபம்: வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால் இளம் பெண் சாவு - சிசு புதைப்பு
கூடலூரில் வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால் இளம்பெண் மர்மமான முறையில் பரிதாபமாக இறந்தார். மேலும் சிசுவையும் புதைத்தது குறித்து பெண்ணின் பெற்றோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கூடலூர்:
நீலகிரி மாவட்டம் கூடலூர் 1-ம் மைல் அருகே நிமினி வயல் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி தேவன். இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு சரஸ்வதி, பிரியா (வயது 21) என்ற மகள்களும், லோகேஷ் என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில் பிரியா வாலிபர் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் தனிமையில் சந்தித்து வந்தார்.
இதன் காரணமாக அவள் 7 மாத கர்ப்பிணி ஆனார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் பிரியா இறந்து விட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று பிரியா உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். மேலும் அவள் சாவில் மர்மம் இருப்பது தெரியவந்தது. பின்னர் பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரி கொண்டு சென்றனர்.
இதைத் தொடர்ந்து பிரியாவின் பெற்றோர், உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது வாலிபருடன் நெருங்கி பழகியதால் பிரியா 7 மாத கர்ப்பம் அடைந்ததாகவும், இதனால் வெளியில் தெரிந்தால் அவமானம் எனக்கருதி வீட்டிலேயே பிரசவம் பார்த்ததாக கூறினர். தொடர்ந்து பிரசவத்தின் போது அதிக அளவு ரத்தம் வெளியேறியதால் உடல்நிலை பாதிக்கப்பட்டு பிரியா உயிரிழந்தது தெரியவந்தது.
மேலும் பிரியாவின் வயிற்றில் இருந்த 7 மாத சிசுவை வீட்டின் அருகே நிலத்தில் தோண்டி புதைத்தது தெரிய வந்தது. தொடர்ந்து பெற்றோர், உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதனிடையே நேற்று மாலை பிரியாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் கூடலூர் தாசில்தார் சித்தராஜ் முன்னிலையில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் தலைமையிலான போலீசார் நிலத்தில் புதைத்த சிசுவின் உடலை தோண்டி எடுத்தனர்.
பின்னர் பிரேத பரிசோதனைக்காக கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து கூடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீசார் கூறும்போது, இறந்த இளம் பெண்ணின் உடல் பிரேத பரிசோதனை அறிக்கையும், நிலத்தில் புதைத்திருந்த சிசுவின் உடல் பிரேத பரிசோதனை அறிக்கையும் கிடைத்த பின்னர் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.