போக்சோவில் கைதான வாலிபர் செங்கல்பட்டு சிறையில் பலி


போக்சோவில் கைதான வாலிபர் செங்கல்பட்டு சிறையில் பலி
x

செங்கல்பட்டு சிறையில் போக்சோ சட்டத்தில் கைதான வாலிபர் உடல் நலக்குறைவால் இறந்தார்.

செங்கல்பட்டு

போக்சோவில் கைதானவர்

செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் அடுத்த திரிசூலம் பச்சையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரஞ்சித் குமார் (வயது 27). இவர் தனியார் நிறுவனத்தில் கூரியராக வேலை செய்து வந்தார். இவர் பள்ளி மாணவி ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு ரஞ்சித் குமார் அந்த மாணவியுடன் வீட்டை விட்டு வெளியேறினார்.

இது தொடர்பாக கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பள்ளி மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர். அதன்படி ரஞ்சித் குமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர் படுத்தி செங்கல்பட்டு மாவட்ட சிறையில் கடந்த ஜூலை 4-ஆம் தேதி அடைத்தனர்.

சாவு

இந்த நிலையில் நேற்று முன்தினம் ரஞ்சித் குமாருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவரை சிறை அதிகாரிகள் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ரஞ்சித் குமார் உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரஞ்சித்குமாரின் உறவினர்கள் கூறுகையில், ஒரு நாள் விட்டு ஒரு நாள் சிறையில் உள்ள ரஞ்சித் குமாரை தாங்கள் பார்த்து விட்டு வந்த நிலையில், போகும் போதெல்லாம் தன்னை சிறையில் உள்ள போலீசார் கடுமையாக தாக்குவதாக கூறினார். மேலும் நேற்று முன்தினம் சிறைக்கு சென்று பார்த்தபோது ரஞ்சித் குமாரின் உடல்நிலை மோசமாக இருந்தது. எனவே ரஞ்சித்குமாரை சிறைக்காவலர்கள் தாக்கியதால் தான் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்தாக குற்றம் சாட்டினர்.

இந்த சம்பவம் செங்கல்பட்டு வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story