"இளைஞர்கள் பாரம்பரிய கலைகள் மீது அக்கறையுடன் இருக்க வேண்டும்"- கனிமொழி எம்.பி.
“இளைஞர்கள் பாரம்பரிய கலைகள் மீது அக்கறையுடன் இருக்க வேண்டும்” என்று நெல்லையில் நடந்த ஓவிய பயிலரங்கத்தில் கனிமொழி எம்.பி. பேசினார்.
நெல்லை பாளையங்கோட்டை மேடை போலீஸ் நிலையம் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது. இங்கு உள்ள மேற்கு கோட்டைவாசல் பூங்காவில் இயற்கை வண்ண ஓவிய பயிலரங்கம் தொடக்க விழா நேற்று நடந்தது. சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கினார். நெல்லை உதவி கலெக்டர் சந்திரசேகர் முன்னிலை வகித்தார். எழுத்தாளர் நாறும்பூநாதன் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு, ஓவியம் வரைந்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
கலைஞர்கள் எந்த இடத்தில் கலைகளை கண்டெடுக்க முடியும் என்றால் அது வாழ்க்கையில் மட்டும் தான். ஒரே நேரத்தில் செயற்கை நுண்ணறிவு பற்றி பேசிக்கொண்டு இருப்பதோடு, பெருமையோடு அகழ்வாராய்ச்சியையும் நடத்தி கொண்டு இருக்கிறோம். உலக அளவில் நம்முடைய கருத்துகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. சமூக வலைதளங்களில் நம்முடைய கருத்துகளை வெளியிடுவதற்காக பல கதவுகளை திறந்து விட்டிருக்கின்ற அதே நேரத்தில் பெண்கள் ஒரு கருத்தை வெளியிடும்போது அதில் அவர்கள் சந்திக்க வேண்டிய எதிர்வினைகள் எந்த அளவிற்கு இருக்கிறது என்பதையும் நாம் தொடர்ந்து பார்த்து கொண்டிருக்கிறோம்.
உலகம் நம்முன் விட்டு வைத்திருக்கின்ற விஷயங்கள் நிறைய இருக்கிறது. அதை நீங்கள் எப்படி உள்வாங்கி, வெளியிடுவது தான் கலை. கலைஞர்கள் அனுபவம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. எந்த தடைகளையும் கடந்து அனுபவங்களை தேடி செல்லும்போது தான் கலை என்பது இன்னும் முழுமை அடையக்கூடிய ஒன்றாக, எல்லைகளை தாண்டி நிற்கக்கூடிய ஒன்றாக மாறுகிறது.
கவிதைகள், இசை, ஓவியம், சிற்பம், நவீனக்கலை, நமது பழமை மொழி அதில் இருக்கக்கூடிய அழகு இதை உணரும் போது தான் எந்த கலைஞராக இருந்தாலும் அவர்கள் முழுமை அடைய முடியும். அடுத்த தலைமுறையினரான இளைஞர்களாகிய நீங்கள் அனைவரும் நமது பாரம்பரியம், பண்பாடு, கலைகள் மீது அக்கறையுடன் இருக்க வேண்டும்.
ஓவியப்பயிற்சி என்பது மிகவும் முக்கியமான ஒன்று. தமிழில் தொடர்ச்சியை பெருமையாக சொல்லிக் கொண்டு இருக்கிறோம். ஆனால் சில மொழிகளில் தொன்மை இருக்கலாம். ஆனால் பேசும் நபர்கள் அதிக அளவில் இல்லை. ஆனால் தொன்மை மட்டும் அல்ல, தொடர்ச்சியும் இருக்கக்கூடிய செம்மொழி தான் தமிழ் மொழி. கலை, மொழி போன்றவைகளுக்காக தொடர்ந்து உறுதுணையாக இருக்கும் ஆட்சியை தமிழகத்தில் முதல்-அமைச்சர் நடத்தி வருகிறார்.
தமிழகத்தில் சித்தன்னவாசல் தொடங்கி பல கோவில்களில் இயற்கை ஓவியங்கள் அமைந்துள்ளது. ஆனால் அதனை பெரிதாக யாரும் மதிப்பதில்லை. அதனை புனரமைப்பு செய்கிறோம் என்ற பெயரில் வெள்ளையடித்து அதனை கெடுத்து விடுகின்றனர். தஞ்சை பெரிய கோவில் சுவரில் இருக்கும் ஓவியங்கள் மீது தேர்வு எண்களை எழுதி வைக்கின்றனர். அந்த எண்களை குறித்து வைத்து கொண்டு அவர்களை தேர்வில் தோல்வியடைய செய்து விடலாம் என தோன்றும். தொன்மைகள் குறித்து நமக்கு அக்கறை இல்லாததை இதுபோன்ற செயல்கள் காட்டுகிறது.
பல மொழிகள் தொன்மையாக இருந்தாலும் அதைப் பேசக்கூடிய நபர்கள் இல்லாவிட்டாலும் கோடிக்கணக்கில் அரசு அந்த மொழிக்கு தான் நிதி ஒதுக்கீடு செய்து உதவுகிறது. கல்வெட்டுகளை படிப்பதற்கு கூட ஆட்கள் இல்லாத நிலை தற்போது தமிழகத்தில் உள்ளது. காலநிலை மாற்றம் என்ற மிகப்பெரிய காலகட்டத்தில் நாம் இருந்து வருகிறோம். வரும் காலங்களில் காலநிலை மாற்றத்தால் பல பிரச்சினைகளை சந்திக்க கூடிய சூழல் உருவாகும். இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் அப்துல்வகாப் எம்.எல்.ஏ., முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன், ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி, துணைமேயர் கே.ஆர்.ராஜூ, நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் மைதீன்கான், தலைமை செயற்குழு உறுப்பினர் பிரபாகரன், முன்னாள் எம்.பி. விஜிலாசத்யானந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர். கனிமொழி எம்.பி.க்கு நெல்லை மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி, பாரம்பரிய பெண்களின் அணிகலனான பாம்படம் நினைவு பரிசாக வழங்கினார்.