கடலூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.52 லட்சம் பறிமுதல்


கடலூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.52 லட்சம் பறிமுதல்
x
தினத்தந்தி 3 March 2021 3:51 AM GMT (Updated: 3 March 2021 3:51 AM GMT)

கடலூரில், 2 இடங்களில் நடத்திய சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.52 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

கடலூர், 

தமிழக சட்டசபை தேர்தலில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடாவை தடுக்க பறக்கும்படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் நியமிக்கப்பட்டு பல்வேறு இடங்களில் தீவிர வாகன சோதனை நடந்து வருகிறது. நேற்று கடலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கடலூர் சின்னகங்கணாங்குப்பத்தில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதுச்சேரியில் இருந்து கடலூர் நோக்கி வந்த காரை பறக்கும் படையினர் வழிமறித்து சோதனை நடத்தினர். தொடர்ந்து காரில் இருந்த நபர் கையில் வைத்திருந்த பையை திறந்து பார்த்தனர். அதில் கட்டுக் கட்டாக பணம் இருந்தது. இது பற்றி அவரிடம் பறக்கும் படையினர் விசாரித்தனர். அதற்கு அவர் சுமார் ரூ.50 ஆயிரம் இருக்கும் என்று தெரிவித்தார்.

ஆனால் அதற்கான உரிய ஆவணம் எதுவும் அவரிடம் இல்லை. இதையடுத்து அவரை பறக்கும் படையினர் காருடன் கடலூர் தாலுகா அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் அவர் வைத்திருந்த மற்றொரு பையையும் சோதனையிட்டனர்.

பறிமுதல்

அந்த பையில் கட்டுக்கட்டாக 2 ஆயிரம் ரூபாய், 500 ரூபாய் நோட்டுகள் இருந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த பறக்கும் படையினர், அவரிடம் தொடர்ந்து விசாரித்த போது, அவர் கர்நாடக மாநிலம் மங்களூரை சேர்ந்த ராம்நாத் பிரசாத் என்றும், அவர் பெங்களூருவில் தனியார் நிறுவனத்தை நடத்தி வருவதாகவும், தற்போது பரங்கிப்பேட்டை அருகே தனியார் அனல் மின் நிலையத்தில் ஒப்பந்தம் எடுத்து ஆட்களை வைத்து வேலை செய்து வருவதாகவும், அவர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்காக பணத்தை கொண்டு செல்வதாகவும் தெரிவித்தார்.இதையடுத்து அவர் கொண்டு வந்த பணத்தை பறக்கும் படையினர், வருவாய்த்துறையினர் எண்ணி பார்த்தனர். அதில் ரூ.51 லட்சத்து 36 ஆயிரம் இருந்தது. ஆனால் அந்த பணத்தை கொண்டு வந்ததற்கான எவ்வித ஆவணங்களும் அவரிடம் இல்லை. இதையடுத்து அந்த பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து, தாசில்தார் பலராமனிடம் ஒப்படைத்தனர்.

இதேபோல் கடலூர் முதுநகர் பச்சையாங்குப்பம் இரட்டை ரோட்டில் நடந்த வாகன சோதனையின் போது, கங்கணாங்குப்பத்தை சேர்ந்த மளிகைக்கடைக்காரர் மணிகண்டன் என்பவரிடம் இருந்து ரூ.65 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

பட்டுச்சேலைகள் பறிமுதல்

கடலூர் பெரியகங்கணாங்குப்பம் பகுதியில் நேற்று மாலை புதுச்சேரியில் இருந்து கடலூர் நோக்கி வந்த ஆந்திரா மாநிலம் ஹரிப்பூரை சேர்ந்த சதீஷ் (வயது 52) என்பவரது காரை வழிமறித்து பறக்கம்படையினர் சோதனை செய்தனர். அதில் உரிய ஆவணங்கள் ஏதும் இல்லாமல் ரூ.1 லட்சத்து 56 ஆயிரம் மதிப்புள்ள 90 பட்டுச் சேலைகள் கொண்டு செல்லப்படுவது தெரியவந்தது. இதையடுத்து பறக்கும் படையினர் அந்த பட்டுசேலைகளை பறிமுதல் செய்தனர்.

சிவகங்கை, சேலம், நாமக்கல்

சிவகங்கை காளவாசல் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் நடந்த வாகன சோதனையில் சென்னையிலிருந்து வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி பறக்கும் படையினர் சோதனை செய்தனர். அந்த காரின் பின்பகுதியில் ரூ.6 லட்சத்து 50 ஆயிரத்தை மறைத்து வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த காரில் வந்த பிரகாஷ்ராஜா என்பவரிடம் விசாரித்த போது அவரிடம் இந்த பணத்தை கொண்டு செல்வதற்கான உரிய ஆவணங்கள் இல்லையென்று தெரிய வந்தது. இதை தொடர்ந்து ரூ.6 லட்சத்து 50 ஆயிரத்தை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதேபோல சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 4 இடங்களில் நடந்த வாகன சோதனையில் மொத்தம் ரூ‌.9 லட்சத்து 54 ஆயிரத்து 690 பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story