தி.மு.க. வேட்பாளர்கள் நேர்காணல் 2-வது நாளில், 7 மாவட்டங்களுக்கு நடைபெற்றது
தி.மு.க. வேட்பாளர் நேர்காணல் 2-வது நாளான நேற்று 7 மாவட்டங்களுக்கு நடந்தது.
சென்னை,
தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் வேட்பாளராக களம் இறங்க விரும்புபவர்களிடம் இருந்து கடந்த மாதம் 17-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை விருப்ப மனுக்கள் பெறப்பட்டது.
அதனடிப்படையில் சென்னை அறிவாலயத்தில் வேட்பாளர்கள் நேர்காணல் நேற்றுமுன்தினம் தொடங்கியது. இந்த நேர்காணலை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுசெயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு ஆகியோர் நடத்துகின்றனர்.
முதல் நாளில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, தேனி, திண்டுக்கல் ஆகிய 9 மாவட்டங்களுக்கு நேர்காணல் நடத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால் அதிகம் பேர் குவிந்ததால், சிவகங்கை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள தொகுதிகளுக்கான நேர்காணல் ஒத்திவைக்கப்பட்டு நேற்று காலை நடைபெற்றது.
மேலும் மதுரையில் சில தொகுதிகளுக்கும் காலையில் நேர்காணல் நடத்தப்பட்டது. மாலையில் மதுரையில் விடுபட்ட தொகுதிகள், நீலகிரி, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு நேர்காணல் நடந்தது. மாலையில் நேர்காணல் பட்டியலில் கோவை, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் இடம் பெற்றிருந்தது. ஆனால் நேரமில்லாததால் அந்த 2 மாவட்டங்களுக்கு இன்று (வியாழக்கிழமை) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மு.க.ஸ்டாலினின் கேள்விகள்
திருச்சுழி தொகுதிக்கு முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, திருப்பத்தூர் தொகுதிக்கு முன்னாள் அமைச்சர் பெரிய கருப்பன், போடி தொகுதிக்கு தங்க தமிழ்செல்வன், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு சுப்புலட்சுமி ஜெகதீசன், அருப்புக்கோட்டை தொகுதிக்கு முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் உள்ளிட்டோர் நேர்காணலில் பங்கேற்றனர்.
நேர்காணலின்போது கட்சி தொடர்பான கேள்விகளுடன், தொகுதி நிலவரம் குறித்தும் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். தொகுதியில் கூட்டணி கட்சிகளுக்கான செல்வாக்கு குறித்தும் கேட்டறிந்தார். ஒரு தொகுதிக்கு பலர் விருப்பம் தெரிவித்துள்ளனர். ஆனால் ஒருவருக்கு மட்டும் தான் வாய்ப்பு வழங்க முடியும். எனவே கட்சி தலைமை யாரை வேட்பாளராக முன் நிறுத்துகிறதோ? அவரது வெற்றிக்கு பாடுபட வேண்டும். கூட்டணி கட்சி வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டால், அவர்களுக்கும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.
இன்று...
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலையில் தர்மபுரி, நாமக்கல், சேலம், புதுக்கோட்டை, கோவை, கிருஷ்ணகிரி ஆகிய 6 மாவட்டங்களுக்கும், மாலையில் கரூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 6 மாவட்டங்களுக்கும் நேர்காணல் நடைபெற உள்ளது.
Related Tags :
Next Story