இறங்கி வரும் காங்கிரஸ் திமுக கூட்டணியின் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இன்று - நாளைக்குள் இறுதி வடிவம்
இறங்கி வரும் காங்கிரஸ் திமுக கூட்டணியின் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இன்று அல்லது நாளைக்குள் இறுதி வடிவம் பெறும்
சென்னை
தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் 40 தொகுதிகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளது. ஆனால், காங்கிரஸ் கட்சிக்கு அதிகபட்சம் 20 முதல் 22 தொகுதிகள் தான் வழங்க முடியும் என்று தி.மு.க. தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டதாக தெரிகிறது.
இதன் காரணமாக தி.மு.க-காங்கிரஸ் இடையே நடைபெற்ற 2 கட்ட தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு ஏற்படவில்லை. தி.மு.க., ஆரம்பத்தில் எடுத்த முடிவில் இருந்து பின்வாங்கவில்லை. இதனால், தி.மு.க. அளிக்கும் தொகுதிகளை பெற்றுக்கொண்டு தேர்தலை சந்திக்கலாமா? அல்லது வேறு முடிவுகளை எடுக்கலாமா? என்பது குறித்து மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்களுடன் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ்குண்டுராவ் சென்னை சத்தியமூர்த்தி பவனில் தனித்தனியாக கருத்துகளை கேட்டறிந்தார்.
மாநில செயல் தலைவர் விஷ்ணு பிரசாத், துணைத்தலைவர் விஜய் வசந்த், பொதுச்செயலாளர்கள் பி.வி.தமிழ்செல்வன், தளபதி பாஸ்கர், மாநில செயலாளர் அகரம் கோபி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கருத்து தெரிவித்தனர்.
நிர்வாகிகளில் சிலர், ‘கவுரமான எண்ணிக்கையில் தொகுதி கிடைக்காதபட்சத்தில் தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேற தயங்கக்கூடாது. தனித்து போட்டியிட்டு நமது பலத்தை காண்பிக்கலாம். காங்கிரஸ் தொண்டர்கள் எதற்கும் தயாராக உள்ளனர்' என்று கூறி உள்ளனர்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் சத்தியமூர்த்தி பவனில் இன்று நடக்கிறது . தேர்தல் கூட்டணி முடிவெடுப்பதற்காக செயற்குழுவில் நிர்வாகிகளுடன் காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை நடத்துகின்றனர்.
தற்போது திமுக கூட்டணியில் 27 தொகுதிகள் ஒதுக்குமாறு காங்கிரஸ் இறங்கி வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. திமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் 40 தொகுதிகளில் ஆரம்பித்து 35 தொகுதிகள் வரை காங்கிரஸ் கோரி வந்தது.
திமுக 25 தொகுதிகள் வழங்க முன்வந்துள்ள நிலையில் 27 தொகுதிகளாக காங்கிரஸ் தற்போது கோருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த கட்ட பேச்சுவார்த்தையின் போது திமுக தரப்பிடம் காங்கிரஸ் 27 தொகுதிகள் கோரும் என தகவல் வெளியாகி உள்ளது.
திமுக - காங்கிரஸ் கூட்டணியின் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இன்று அல்லது நாளைக்குள் இறுதி வடிவம் பெறும் என வீரப்பமொய்லி தெரிவித்தார்.
திமுக - காங்கிரஸ் இடையிலான தொகுதி பங்கீட்டில் இழுபறி இல்லை நாளைக்குள் தொகுதி பங்கீடு இறுதி வடிவம் பெறும் என தமிழக காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் வீரப்ப மொய்லி தெரிவித்தார்.
Related Tags :
Next Story