ராஜ்யசபா சீட் கேட்டது உண்மைதான்; ‘அ.தி.மு.க.விடம் 25 தொகுதிகளாவது வேண்டும் என கேட்டிருக்கிறோம்’; தே.மு.தி.க. துணைச் செயலாளர் தகவல்


ராஜ்யசபா சீட் கேட்டது உண்மைதான்; ‘அ.தி.மு.க.விடம் 25 தொகுதிகளாவது வேண்டும் என கேட்டிருக்கிறோம்’; தே.மு.தி.க. துணைச் செயலாளர் தகவல்
x
தினத்தந்தி 6 March 2021 1:53 AM GMT (Updated: 6 March 2021 1:53 AM GMT)

‘அ.தி.மு.க.விடம் 25 தொகுதிகளாவது வேண்டும் என கேட்டு சற்று இறங்கி வந்திருக்கிறோம்’ என்றும், ‘ராஜ்யசபா சீட் கேட்டது உண்மைதான்’ என்றும் தே.மு.தி.க. துணைச் செயலாளர் பார்த்தசாரதி கூறினார்.

அ.தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை

சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் துணைச் செயலாளர் பார்த்தசாரதி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

தே.மு.தி.க. சார்பில் எங்கள் கட்சித்தலைவரின் (விஜயகாந்த்) கருத்தை அ.தி.மு.க.விடம் கூறி குறிப்பிட்ட இடங்களை கேட்டோம். அவர்கள் குறைத்து தருவோம் என்றார்கள். நாங்கள் கூறிய இலக்கை ஏற்றால், கண்டிப்பாக ஒப்பந்தத்தில் கையெழுத்து போடுவோம் என்று கூறியிருக்கிறோம்.

அ.தி.மு.க. கூட்டணியில்தான் இருக்கிறோம். அ.தி.மு.க.வுடன்தான் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். இதர கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. எண்ணிக்கை முடிவான பிறகே தொகுதியைப் பற்றி பேசமுடியும். எங்களுக்கு வேண்டிய தொகுதிகளை கேட்டுப் பெறுவோம்.

41 தொகுதிகள்

பா.ம.க.வுக்கு இணையாக நாங்கள் தொகுதிகளை கேட்கவில்லை. 2011 சட்டமன்றத் தேர்தல் போலவே கூட்டணியில் 41 தொகுதிகள் வேண்டும் என கேட்டோம். தற்போது 25 தொகுதிகள் வேண்டும் என்று சற்று இறங்கி வந்திருக்கிறோம். அவர்கள் இன்னும் குறைக்கச் சொல்கிறார்கள். எனவே பேச்சுவார்த்தை தொடருகிறது. ராஜ்யசபா சீட் கேட்டது உண்மைதான்.

எல்.கே.சுதீசின் பேச்சு அ.தி.மு.க. கூட்டணியில் எந்த சலசலப்பையும் ஏற்படுத்தவில்லை. எங்கள் கட்சி நிர்வாகிகள் மத்தியில் நாங்கள் பேசுகிறோம். எல்லா கட்சிகளும் அப்படித்தான் பேசுவார்கள். அவரவர் உரிமையை பேசுவது தவறாகிவிடாது. நிர்வாகிகள், தொண்டர்களை உற்சாகப்படுத்த இப்படி பேசுவோம். அதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியமாகாது.

கூட்டணி என்றாலே கண்டிப்பாக பேச்சுவார்த்தை இழுபறி இருக்கும். மற்றபடி ஒன்றுமில்லை. இன்னும் 2 நாளில் இந்த பேச்சுவார்த்தை முடியும். நல்ல தகவல் வரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

 


Next Story