தொகுதி கண்ணோட்டம்: ராமநாதபுரம்


தொகுதி கண்ணோட்டம்: ராமநாதபுரம்
x
தினத்தந்தி 6 March 2021 4:59 AM GMT (Updated: 6 March 2021 4:59 AM GMT)

3 பக்கமும் கடலால் சூழப்பட்டது ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி

கடலும், கடல் சார்ந்த தொழிலும், நிலமும் நிலம் சார்ந்த விவசாயமும் மட்டுமல்லாமல் அகில இந்திய புண்ணிய தலமான ராமேசுவரம் கோவில், கடல் மீது போடப்பட்டுள்ள பாம்பன் பாலம் என இந்த தொகுதியில் உள்ள சிறப்புகள் பலப்பல. மறைந்த முன்னாள் ஜனாதிபதி, அப்துல்கலாம் சொந்த ஊரும் ராமேசுவரம்தான்.தொழில்வளம் இல்லாமல் துவண்டுபோய் உள்ள தொகுதியாகவே ராமநாதபுரம் உள்ளது.

ஹாட்ரிக் வெற்றி
ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி தேர்தல்களில் ராமநாதபுரம் மன்னர் சண்முகராஜேஸ்வர சேதுபதி 3 முறை தொடர்ச்சியாக ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ளார். பிற்காலத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் டி.ராமசாமியும் தொடர்ந்து 3 முறை இத்தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.ஒவ்வொரு தேர்தலிலும் இந்த தொகுதியில் வெற்றி பெறும் கட்சியோ, அல்லது அது எந்த கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளதோ, அதுதான் மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் என்ற கருத்தும் பரவலாக உள்ளது.

அந்த வகையில் வரும் சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக இந்த தொகுதியின் கடந்த கால வரலாறுகள், கடந்து வந்த பாதைகளை பார்க்கலாம்......!

வெற்றி பெற்றவர்கள்
ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியின் முதல் உறுப்பினராக ராமநாதபுரம் மன்னர் சண்முகராஜேஸ்வர சேதுபதி கடந்த 1952-ம் ஆண்டு காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் சுயேச்சையாக 1957-ம் ஆண்டு தேர்தலிலும், மீண்டும் காங்கிரஸ் சார்பில் 1962-ம் ஆண்டு தேர்தலிலும் போட்டியிட்டு அவர் வெற்றி பெற்று சாதனை படைத்தார்.1967 தேர்தலில் தி.மு.க வேட்பாளர் தங்கப்பன் வெற்றி பெற்றார். அதன் பின்னர் கடந்த 1971-ம் ஆண்டு தி.மு.க. வேட்பாளர் சத்தியேந்திரனும், 1977, 1980, 1984-ல் அ.தி.மு.க. வேட்பாளர் டி.ராமசாமி தொடர்ந்து 3 முறை வெற்றி பெற்றார். 

கடந்த 1989-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் ராஜேந்திரனும், 1991-ல் அ.தி.மு.க. வேட்பாளர் தென்னவனும், 1996-ல் தி.மு.க. வேட்பாளர் ரகுமான்கான், 2001-ல் அ.தி.மு.க. வேட்பாளர் அன்வர்ராஜா ஆகியோர் வெற்றி பெற்றனர். 2006-ல் காங்கிரஸ் வேட்பாளர் அசன்அலி, 2011-ல் மனிதநேய மக்கள் கட்சி ஜவாஹிருல்லா வெற்றி பெற்றனர்.கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் மணிகண்டன் வெற்றி பெற்றார்.

வாக்குகள் விவரம்
2016-ம் ஆண்டு தேர்தலில் ஒவ்வொரு கட்சியும் பெற்ற வாக்குகள் விவரம்:-

டாக்டர் மணிகண்டன் (அ.தி.மு.க.)- 89,365

ஜவாஹிருல்லா (மனித நேய மக்கள் கட்சி)- 56,143

சிங்கை ஜின்னா (தே.மு.தி.க)- 16,353

துரை.கண்ணன் (பா.ஜ.க.)- 15,029

சிவக்குமார்(நாம் தமிழர் கட்சி)- 4,001

3 நகராட்சிகள்
ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியானது ராமநாதபுரம், கீழக்கரை, ராமேசுவரம் ஆகிய 3 நகராட்சிகள், மண்டபம் பேரூராட்சி, ராமநாதபுரம், திருப்புல்லாணி, மண்டபம் யூனியன்களை உள்ளடக்கிய தொகுதியாகும். மீனவர்கள் அதிகம் வசிக்கும் தொகுதியாகும்.இலங்கை கடற்படை தாக்குதல், தடைசெய்யப்பட்ட வலைகள் பயன்பாடு உள்ளிட்டவைகளால் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு அதற்கு தீர்வு காணாத நிலை உள்ளது. மாவட்டத்தில் மற்ற தொகுதிகளில் விவசாய பரப்பளவு அதிகம் இருந்தாலும் ராமநாதபுரம் தொகுதியை பொறுத்தவரை குறைந்த அளவே விவசாய பரப்பாகும். 

பெரிய கண்மாய், சக்கரக்கோட்டை கண்மாய் போன்ற நீர்ஆதாரங்களை நம்பியே வாழும் விவசாயிகளுக்கு வடகிழக்கு பருவமழை பெரும்பாலும் கைகொடுப்பதில்லை.கல்விக்காக கல்லூரிகள் பல ஏற்படுத்தினாலும் படித்தவர்களுக்கு தொழிற்சாலைகளோ, தொழில்வாய்ப்புகளோ இன்று வரை இல்லாத நிலையே உள்ளது.

பாதாள சாக்கடை திட்டம்
இந்த தொகுதியின் குடிநீர் தட்டுப்பாடு முக்கிய பிரச்சினையாக இருந்து வந்தது. அரசால் நிறைவேற்றப்பட்ட கூட்டுக்குடிநீர் திட்டத்தினால் அந்த பிரச்சினை ஓரளவு தீர்ந்துள்ளது. ராமநாதபுரத்தில் பாதாள சாக்கடை திட்டம் பல கோடி ரூபாய் செலவில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை என்பது வேதனைக்குரியது.புண்ணியதலமான ராமேசுவரம் பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டு இன்றுவரை அறிவிப்பாகவே இருந்து வருகிறதே ஒழிய அப்பகுதியில் சாக்கடை கழிவுநீர் பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படவில்லை. இந்த 
தொகுதியில் யாரும் கண்டுகொள்ளாத வேதனையான விஷயம் இதுவரை ராமநாதபுரம் நகரில் அரசு மேல்நிலைப்பள்ளி இல்லாததுதான்.

மருத்துவ கல்லூரி
கடந்த 5 ஆண்டுகளில் இந்த மாவட்டம் வளர்ந்து வரும் மாவட்டங்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. சட்டக்கல்லூரி, மருத்துவ கல்லூரி, கலை அறிவியல் கல்லூரி என கல்வியில் முன்னேறிய பகுதியாக தொகுதி மாறியுள்ளது. மருத்துவ கல்லூரி வந்துள்ளதால் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியின் தரம் உயர்ந்து மருத்துவ சேவையும் அதிகரித்துள்ளது. போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண கீழக்கரை சாலையில் ரெயில்வே மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது. இருப்பினும் சீரான குடிநீர் வினியோகம், விரிவாக்க பகுதிகளுக்கு பாதாள சாக்கடை வசதி உள்ளிட்டவையும் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்கள் ஆகும்.எனவே இந்த தேர்தலில் புதிதாக தேர்வு செய்யப்படும் சட்டமன்ற உறுப்பினர் மேற்கண்ட பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே 
மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

பயோடேட்டா
மொத்த வாக்காளர்கள் ... 3,06,372

ஆண்கள் ........................ 1,51,772

பெண்கள் ..........................1,54,579

மூன்றாம் பாலினத்தவர் .............. 21

Next Story