நேர்காணல் கடைசிநாள் : உதய நிதியிடம் நேர்காணல் நடத்திய மு.க. ஸ்டாலின்


நேர்காணல் கடைசிநாள் : உதய நிதியிடம் நேர்காணல் நடத்திய மு.க. ஸ்டாலின்
x
தினத்தந்தி 6 March 2021 8:01 AM GMT (Updated: 6 March 2021 8:01 AM GMT)

கடைசிநாளான இன்று திமுக நேர்காணலில் மு.க. ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டனர்.

சென்னை

தற்போது தி.மு.க.வில் வேட்பாளர்கள் நேர்காணல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த 2-ந்தேதி தொடங்கி, காலை-மாலை என இருவேளைகளிலும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

நேற்று 4-வது நாளாக நேர்காணல் நடைபெற்றது. இதில், காலையில் தஞ்சை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள தொகுதிகளுக்கும், மாலையில் திருவண்ணாமலை, வேலூர், காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள தொகுதிகளுக்கும் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்கள் பங்கேற்றனர். புதுச்சேரி, காரைக்கால் ஆகிய இடங்களில் உள்ள தொகுதிகளுக்கு இன்று (சனிக்கிழமை) மாலை நேர்காணல் நடைபெறும் என்று முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவசர அழைப்பு மூலம் நேற்று அந்த இடங்களுக்கு நேர்காணல் நடந்து முடிந்தது. இந்தநிலையில் தி.மு.க. வேட்பாளர்கள் நேர்காணல் இன்றுடன் நிறைவு பெறுகிறது. கடைசிநாளான இன்று திருவள்ளூர், சென்னை ஆகிய மாவட்டங்களில் உள்ளடங்கிய தொகுதிகளுக்கு நேர்காணல் நடக்கிறது.

 கடைசி நாளான இன்று  நேர்காணலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். கொளத்தூர் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்த ஸ்டாலினிடம், துரைமுருகன் நேர்காணல் நடத்தினார்.

ஏற்கெனவே, 1984 முதல் 2006 வரை நடைபெற்ற சட்டப்பேரவைப் பொதுத் தேர்தல்களில் ஆயிரம் விளக்கு தொகுதியில் மு.க.ஸ்டாலின் போட்டியிட்டார். இதில், 1984 மற்றும் 1991 ஆகிய தேர்தல்களில் ஸ்டாலின் தோல்வியைத் தழுவினார். இதன் பின்னர், 2011, 2016 ஆகிய சட்டப்பேரவைத் தேர்தல்களில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில், மூன்றாவது முறையாக இந்தத் தேர்தலிலும் கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் போட்டியிட உள்ளார். திமுக தலைவரே நேரடியாகப் போட்டியிடும் தொகுதி என்பதால், பிரதான கட்சியான அதிமுகவில் யார் களமிறக்கப்படுவார் எனும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அதேபோன்று, சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி விருப்ப மனு அளித்தார். சேப்பாக்கம், திருவல்லிக்கேணி இரண்டு தொகுதிகளாக கடந்த 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் களம் கண்டது. 2011 தேர்தலில் ஒரு தொகுதியாய் மாறிப் போனது. அத்தொகுதியில் 2011, 2016 தேர்தல்களில் திமுக சார்பில் மறைந்த ஜெ.அன்பழகன் வெற்றி பெற்றார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஜெ.அன்பழகன் மறைந்த நிலையில், உதயநிதி அத்தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்தார்.

அவரிடம், நேரடியாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேர்காணல் நடத்தினார். அப்போது பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, துணைப் பொதுச் செயலாளர் பொன்முடி உள்ளிட்டோர் இருந்தனர்.

Next Story