கமலுக்கும் பொருந்தும்: “தமிழகத்தில் 3-வது அணி தேர்தல் முடிவை தீர்மானிக்காது”; ப.சிதம்பரம் பேட்டி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
இந்தியாவில் இன்றைய சூழ்நிலையில் தபால் ஓட்டுகள் விரும்பத்தகாதது. அதில் பல முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளது. மக்கள் விரும்பாத சட்டங்களை மக்கள் மீது திணிக்கும் செயலை மத்திய அரசு தொடர்ந்து செய்துகொண்டே வருகிறது. ஜி.எஸ்.டி., பணமதிப்பிழப்பு, வேளாண் திருத்தச்சட்டம் என பட்டியலிட்டுக்கொண்டே போக முடியும். தமிழக சட்டமன்ற தேர்தலில் 3-வது அணி என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. தமிழ்நாட்டில் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய 2 பெரிய கட்சிகள் உள்ளன. இவை அமைக்கும் கூட்டணிக்கு இடையே தான் போட்டி நடைபெறும். 3-வது அணி என யாராவது வருவார்களேயானால், அந்த அணி நாங்களும் இருக்கிறோம் என்பதை காட்டிக்கொள்வதற்கு பயன்படுமே தவிர தேர்தல் முடிவை தீர்மானிக்காது.
இது எனது தாழ்மையான வேண்டுகோள். என் நண்பர் கமல் உள்ளிட்ட அனைவருக்கும் இது பொருந்தும். 1971-ம் ஆண்டு முதல் இரு பெரும் கட்சிகள் அமைக்கும் கூட்டணிக்கு இடையே தான் போட்டி நடைபெற்று வருகின்றன. இது வரலாறு. இதனை மாற்றி அமைக்க இயலாது. பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வர மத்திய அரசுக்கு விருப்பம் இல்லை. எனவேதான் பரிசீலிக்கிறோம் என்று கூறி வருகின்றனர். தேர்தலில் பண பலம் இல்லாதவர்கள் போட்டி போட முடியாதோ என்ற அச்சம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. பா.ஜ.க.வின் பணப்பலத்திற்கு நடந்து முடிந்த தேர்தல்களும், ஆட்சி மாற்றங்களுமே சாட்சி.
தமிழகத்தில் பாரதீய ஜனதா கட்சி எந்த தொகுதியிலும் வென்று விடக்கூடாது என்பதில் காங்கிரஸ் கட்சி உறுதியாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story