தொகுதி கண்ணோட்டம்: திருநெல்வேலி


தொகுதி கண்ணோட்டம்: திருநெல்வேலி
x
தினத்தந்தி 7 March 2021 6:28 AM GMT (Updated: 7 March 2021 6:28 AM GMT)

நெல்லுக்கு வேலியிட்டு சிவபெருமான் திருவிளையாடல் நடத்திய ஆன்மிக தலம் திருநெல்வேலி. நெல்லையப்பர் கோவில் அமைந்திருப்பதால் நெல்லை என்பது சுருக்கப்பெயராக அமைந்துள்ளது. மேலும் நெல்லை மாவட்டத்தில் உற்பத்தியாகும் தாமிரபரணி ஆறு திருநெல்வேலி தொகுதியில் ஏராளமான குளங்களை நிரம்ப செய்து விவசாயம் செழிப்படைய செய்கிறது.

நகரமும், கிராமப்புறமும்
இத்தகைய சிறப்புகள் வாய்ந்த நெல்லை தாலுகா மற்றும் மானூர் தாலுகா பகுதிகளை உள்ளடக்கியதாக நெல்லை சட்டமன்ற தொகுதி அமைந்திருக்கிறது. இந்த தொகுதியில் நெல்லை மாநகராட்சியில் 1-வது வார்டு முதல் 4-வது வார்டு வரையும், 40-வது வார்டு முதல் 55-வது வார்டு வரையிலும், மானூர் யூனியனில் 41 பஞ்சாயத்துகளும் அடங்கி இருக்கிறது.இதில் மானூர் பகுதி பழைய கங்கைகொண்டான் தொகுதியிலும், பின்னர் ஆலங்குளம் தொகுதியிலும் இருந்தது. கடந்த தொகுதி சீரமைப்பின்போது நெல்லை தொகுதியில் சேர்க்கப்பட்டது. இதனால் இந்த தொகுதி அடர்ந்த 
நகரப்பகுதிகளையும், அகண்ட கிராமப்பகுதிகளையும் கொண்டுள்ளது.

அதிக வாக்காளர்கள்
இங்கு பிரசித்திப்பெற்ற நெல்லையப்பர் கோவில், வணிக நிறுவனங்கள், தொழிற்பேட்டை, சிமெண்டு ஆலை, கங்கைகொண்டான் தொழில்நுட்ப பூங்கா மற்றும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், அரசு கால்நடை மருத்துவக்கல்லூரி, ராணி அண்ணா அரசு பெண்கள் கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களும் அமைந்துள்ளன. புள்ளிமான்கள் அதிகளவு காணப்படும் 
கங்கைகொண்டான் மான் பூங்காவும் இந்த தொகுதியில் அமைந்துள்ளது. இங்குள்ள மக்கள் விவசாயம், வியாபாரம், பீடி சுற்றும் தொழில், பித்தளை பாத்திரங்கள் உற்பத்தி ஆகியவற்றில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருநெல்வேலி தொகுதி மாவட்டத்தில் அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதியாக அமைந்திருக்கிறது. இ்ங்கு 1 லட்சத்து 42 ஆயிரத்து 272 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 48 ஆயிரத்து 829 பெண் வாக்காளர்கள், 55 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 2 லட்சத்து 91 ஆயிரத்து 156 வாக்காளர்கள் உள்ளனர்.

வெற்றி விவரம்
இந்த தொகுதியில் இதுவரை 14 பொதுத்தேர்தல்களும், 1 இடைத்தேர்தலும் நடைபெற்றுள்ளது. இதில் அ.தி.மு.க. 7 முறையும் (1977-ம் ஆண்டு, 1980, 1984, 1986, 1991, 2001, 2011), தி.மு.க. 6 முறையும் (1967, 1971, 1989, 1996, 2006, 2016), காங்கிரஸ் கட்சி 2 முறையும் (1957, 1962) வெற்றி பெற்றுள்ளன. 1986-ம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் ஆர்.எம்.வீரப்பன் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.கடந்த 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் லட்சுமணன் 81 ஆயிரத்து 761 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். 2-வது இடம் பிடித்த அ.தி.மு.க. வேட்பாளர் நயினார் 
நாகேந்திரனுக்கு 81 ஆயிரத்து 160 ஓட்டுகள் கிடைத்தன.

கோரிக்கைகள்
நெல்லை டவுன், பேட்டை பகுதி குடிநீர் பிரச்சினையை தீர்க்க அரியநாயகிபுரம் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு இறுதிக்கட்டத்தில் உள்ளது. நெல்லை மாநகரின் மேற்கு பகுதியில் நிலவும் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் மதுரை ரோடு, சங்கரன்கோவில் ரோடு, தென்காசி ரோடு, கடையம் ரோடு, சேரன்மாதேவி ரோடு, நாகர்கோவில் ரோடு ஆகியவற்றை இணைக்கும் வகையில் மேற்கு ரிங் ரோடு அமைக்கும் திட்டத்தை செயல்படுத்தவேண்டும்.

6 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி கொண்ட மானூர் பெரிய குளத்துக்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து உபரியாக செல்லும் தண்ணீரை குழாய் மூலமாக அனுப்பி வைக்க வேண்டும். மானூரில் அரசு கலைக்கல்லூரி அமைக்க வேண்டும். ராமையன்பட்டி குப்பைக்கிடங்கில் தீ விபத்தை கட்டுப்படுத்துவது, கங்கைகொண்டான் தொழில்நுட்ப பூங்காவை மேம்படுத்துவது, நெல்லை டவுன் பகுதியில் உள்ள கால்வாய்களை தூர்வாரி முழுமையாக கான்கிரீட் லைனிங் அமைப்பது, மோசமான நிலையில் உள்ள பேட்டை நூற்பாலையை ஆக்கப்பூர்வமாக மாற்றி பொதுமக்களுக்கு பயன் உள்ளதாக்க வேண்டும் 
என்பன உள்ளிட்டவை இந்த தொகுதி மக்களின் கோரிக்கைகளாக உள்ளது.

இந்த தொகுதியில் வாக்காளர்களின் ஆதரவை பெற்று மகுடம் சூட்டப்போவது யார்? என்பதற்கு வருகிற மே மாதம் 2-ந்தேதி விடை கிடைக்கும்.

பயோடேட்டா 
மொத்த வாக்காளர்கள் - 2,91,156

ஆண்கள் - 1,42,272

பெண்கள் - 1,48,829

மூன்றாம் பாலினத்தவர்கள் - 55

Next Story