தி.மு.க.- காங்கிரஸ் இடையே உடன்படிக்கை ஏற்பட்டது எப்படி? பரபரப்பு தகவல்கள்


தி.மு.க.- காங்கிரஸ் இடையே உடன்படிக்கை ஏற்பட்டது எப்படி? பரபரப்பு தகவல்கள்
x
தினத்தந்தி 8 March 2021 12:54 PM GMT (Updated: 8 March 2021 12:54 PM GMT)

தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சு வார்த்தை தொடங்கியது முதலே காங்கிரஸ் கட்சி, கடந்த முறையைப் போலவே 41 தொகுதிகள் வேண்டும் என்று அடம் பிடித்தது. ஆனால், தி.மு.க. தரப்பில் 25 இடங்களைத் தாண்டி ஒன்றுகூட கூடுதலாக தர முடியாது என்று தடாலடியாக அறிவித்துவிட்டனர்.

சென்னை,

தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சு வார்த்தை தொடங்கியது முதலே காங்கிரஸ் கட்சி, கடந்த முறையைப் போலவே 41 தொகுதிகள் வேண்டும் என்று அடம் பிடித்தது. ஆனால், தி.மு.க. தரப்பில் 25 இடங்களைத் தாண்டி ஒன்றுகூட கூடுதலாக தர முடியாது என்று தடாலடியாக அறிவித்துவிட்டனர்.

தி.மு.க. - காங்கிரஸ் இடையே உடன்படிக்கை ஏற்பட்டது தொடர்பாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

கூட்டணி பேச்சு

இதனால் தி.மு.க. - காங்கிரஸ் இடையேயான தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை 2 நாட்கள் இழுத்தடிக்கப்பட்டு வந்தது. தி.மு.க. தரப்பில், திருச்சி பொதுக்கூட்டத்திற்கு காட்டிய ஆர்வத்தை கூட, கூட்டணி பேச்சு வார்த்தைக்கு காட்டவில்லை.

இந்த நிலையில்தான், நேற்று முன்தினம் காங்கிரஸ் கட்சிக்கு வேறொரு இடத்தில் இருந்து கூட்டணி அழைப்பு வந்தது. அதாவது, மக்கள் நீதி மய்யத்தில் இருந்துதான் அந்த அழைப்பு வந்திருந்தது. எங்கள் கூட்டணிக்கு வந்தால் 40 இடங்களைத் தருவதாகவும் அக்கட்சி வாக்குறுதி அளித்தது.

உடனே, காங்கிரஸ் கட்சியில் இருந்து இரு கோஷ்டி தலைவர்கள் ராகுல்காந்தியை தொடர்பு கொண்டு இதுகுறித்து தெரிவித்தனர். ஆனால், இதில் ஒரு தலைவர் கமல்ஹாசன் கூட்டணிக்கு செல்லலாம் என்றும், மற்றொருவர் வேண்டாம் என்றும் மாறுபட்ட கருத்தை கூறியுள்ளனர்.

மு.க.ஸ்டாலினுடன் ராகுல் பேச்சு

இதனால், என்ன செய்வது என்று யோசித்த ராகுல்காந்தி, நேற்று முன்தினம் இரவு 10.15 மணிக்கு நேரடியாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினிடமே போனில் தொடர்பு கொண்டு பேசினார். "இறுதியாக காங்கிரஸ் கட்சிக்கு எவ்வளவு இடங்களைத்தான் தருவீர்கள்" என்று நேரடியாகவே கேட்டிருக்கிறார்.

அதற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், “நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. 180 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளது. எனவே, மீதமுள்ள இடங்களைத்தான் கூட்டணி கட்சிகளுக்கு வழங்கி வருகிறோம். அந்த வகையில், காங்கிரஸ் கட்சிக்கு 25 இடங்களை தருகிறோம். கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியையும் தருகிறோம்” என்று இறுதியாக சொல்லிவிட்டார்.

சுமுகமாக முடிந்த தொகுதி பங்கீடு

சற்று யோசித்த ராகுல்காந்தியும், சற்று நேரத்தில் தங்கள் கட்சி நிர்வாகிகள் உங்களை சந்திக்க வருவார்கள். தொகுதி பங்கீட்டை இன்றே இறுதி செய்துவிடுங்கள் என்று கூறிவிட்டு போனை வைத்துவிட்டார். அதன்பிறகுதான், காங்கிரஸ் தலைவர்கள் 10.45 மணிக்கு சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்திற்கு சென்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார்கள். சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பில், சட்டமன்ற தேர்தலில் 25 தொகுதிகளும், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியும் காங்கிரஸ் கட்சிக்கு வழங்குவது உறுதி செய்யப்பட்டது. மேலும், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிக்காக, கூடுதலாக ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் தி.மு.க.வில் கேட்கப்பட்டது. அவர்கள் தரப்பிலும் அதை பரிசீலிப்பதாக தெரிவித்ததை தொடர்ந்துதான், தி.மு.க. - காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு சுமுகமாக முடிந்தது.

 


Next Story