தமிழகத்தில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 34 சதவீதம் அதிகரிப்பு தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
தமிழகத்தில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 34 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.
சென்னை,
தமிழக சட்டமன்ற தேர்தல் கையேடு-2021 என்ற புத்தகத்தை மத்திய அரசின் சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம் (பி.ஐ.பி.) தயாரித்துள்ளது. இதை சென்னை தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்டார்.
பின்னர் சத்யபிரத சாகு பேசியதாவது:-
இந்திய ஜனநாயகத்தில் ஏற்பட்டு வரும் வளர்ச்சியை பிரதிபலிக்கும் புத்தகமாக இது உள்ளது. 1951-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை நடந்த சட்டமன்ற தேர்தலின் விவரங்களை இதில் காணலாம். தமிழகத்தில் பல சட்டமன்ற தேர்தல்கள் நடந்துள்ளன. எப்போதுமே சட்டம் ஒழுங்கை பேணிப் பாதுகாக்கும் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.
பொதுவாக, வாக்குச்சாவடிகளை கைப்பற்றுதல் போன்ற சம்பவங்கள் இங்கு நடப்பதில்லை. மிகவும் சுதந்திரமாகவும், நேர்மையாகவும் தேர்தல் நடக்கும் பாரம்பரியத்தை பெற்றுள்ள மாநிலம் என்பதில் இங்குள்ள மக்களுக்கு பெருமை உண்டு. அந்த வகையில் தங்களுக்கான தலைவர்களை மக்கள் ஆண்டாண்டு காலமாக தேர்வு செய்து வருகின்றனர்.
வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு பாதுகாப்பு
இதைத்தான் இந்தியா முழுவதிலும் செயல்படுத்த இந்திய தேர்தல் ஆணையம் முயற்சி செய்து வருகிறது. சுட்டிக்காட்டப்படும் சில குறைபாடுகளையும் களைவது அவசியமாக உள்ளது. நடக்க இருக்கும் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி செய்திருக்கிறோம். வாக்குப்பதிவு எந்திரம், ‘விவிபேட்’ எந்திரங்களை மிகுந்த பாதுகாப்பாக வைத்திருப்பதோடு, அவற்றை இடமாற்றம் செய்வதற்கும் மிகுந்த பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.
கொரோனா பரவல் இன்னும் இருக்கிறது. அது மேலும் பரவாதபடி அனைவருமே கொரோனா தடுப்புக்கான வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
மாவட்டங்களில் கூட்டங்களை நடத்துவதற்காக, நெரிசலை சமாளிக்கும் அளவில் பெரிய அளவில் இடவசதியுள்ள பகுதிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. ஊர்வலங்களை நடத்தவும் தகுந்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளன. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி கூட்டங்களில் பங்கேற்கலாம்.
வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதற்கான சக்கர நாற்காலி வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. பார்வையற்றவர்கள் வாக்களிக்கும் வசதியும் (பிரெய்லி எழுத்து பதிவுகள்) அளிக்கப்படும்.
பயிற்சி
இந்த முறை வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையை 34 சதவீதம் அதிகரிக்கிறோம். அங்கு பணியாற்ற இருக்கும் அலுவலர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறோம்.
மக்களுக்கு எந்தவித தூண்டுதலும் ஏற்படாத வகையில் சிறப்பு தேர்தல் செலவீன பார்வையாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். ‘சி-விஜில்’ செல்போன் செயலி மூலம் தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பான புகார்கள், படங்களை அளிக்கலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் சத்யபிரத சாகுவிடம் இருந்து புத்தகத்தின் முதல் பிரதியை மூத்த பத்திரிகையாளர் மோகன் பெற்றுக்கொண்டார்.
சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தின் கூடுதல் பொது இயக்குனர் அண்ணாதுரை தொடக்க உரையாற்றினார். இயக்குநர் குருபாபு வரவேற்றார். ஊடக தகவல் அலுவலர் கீதா நன்றி கூறினார்.
Related Tags :
Next Story