அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் திமுக வேட்பாளர் பட்டியலை வைத்து மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்


அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் திமுக வேட்பாளர் பட்டியலை வைத்து மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்
x
தினத்தந்தி 12 March 2021 6:27 AM GMT (Updated: 12 March 2021 6:27 AM GMT)

சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் திமுக வேட்பாளர் பட்டியலை வைத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

சென்னை, 

தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. 173 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கூட்டணி கட்சிகளுக்கு 61 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 6 தொகுதிகளை தவிர்த்து, கூட்டணியில் மற்ற கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி போட்டியிடும் தொகுதிகளை இறுதி செய்வதில் மட்டும் காலதாமதம் ஏற்பட்டது. இதற்கிடையே நேற்று நள்ளிரவில் தி.மு.க. மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு இடையே தொகுதி ஒதுக்கீட்டில் உடன்பாடு ஏற்பட்டது.

இதன்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு திருப்பரங்குன்றம், திண்டுக்கல், கந்தர்வக்கோட்டை, கோவில்பட்டி, அரூர் மற்றும் கீழ்வேளூர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை அக்கட்சியின் மாநிலச்செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் ஒதுக்கீடு நிறைவடைந்ததால் தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியாகிறது. இதனை முன்னிட்டு, காலை 10.30 மணியளவில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்தில் உள்ள கருணாநிதி உருவப்படத்தின் முன் வேட்பாளர் பட்டியலை வைத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். மேலும், தன் தாயார் தயாளு அம்மாளிடமும் அவர் ஆசி பெற்றார்.

இதையடுத்து, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அங்கும், வேட்பாளர் பட்டியலை வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது, கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொதுச் செயலாளர்கள் பொன்முடி, ஆ.ராசா ஆகியோர் உடனிருந்தனர். வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுவதையொட்டி சென்னை, கருணாநிதி நினைவிடத்தில் சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது.

Next Story